உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு 'பாவனையாளர் அதிகார சபை வீட்டிற்கு வீடு” என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுர விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கீழ் மாவட்ட நுகர்வோர் அதிகாரசபையின் ஏற்பாட்டின் கீழ் துண்டுப்பிரசுர விநியோக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று வெள்ளிக்கிழமை (15) மட்டக்களப்பின் நகர பகுதிகளில் இடம்பெற்றது.
சந்தையிலே காணப்படுகின்ற காலாவதியான பொருட்கள் பற்றிய தெளிவு, கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்தல், இலத்திரனியல் வணிகத்தினூடாக காணப்படுகின்ற சிக்கல்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மக்கள் எவ்வாறு இப்பிரச்சனைகளில் இருந்து போதிய தெளிவினை பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்குடன் இத்துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் அவர்களின் வழிநடத்துதலின் கீழ் இவ்விழிப்புணர்வு நடைபெற்றது. இதுவரை மட்டக்களப்பு நுகர்வோர் அதிகார சபையானது நுகர்வோர் சட்டத்தை மீறி செயற்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக 990 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. அத்துடன் 34 லட்சம் ரூபா தண்டப்பணத்தையும் அறவிட்டுள்ளது. அந்த வகையில் எஸ்.எல்.எஸ். தரமுத்திரை அற்ற தலைக்கவசங்கள் , அழகுசாதன பொருட்கள், 13 அம்பியர் உடைய மின்சார பொருட்கள், ஆகியனவற்றை பறிமுதல் செய்துள்ளது.
மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், வர்த்தக பொருட்களை கட்டுப்பாட்டை மீறி பதுக்கிவைக்கும் வர்த்தகர்கள், கட்டுருத்தல் இல்லாமல் பொருட்களை வழங்குபவர்கள், விலைப்பட்டியல் வழங்காமல் பொருட்களை விற்பனை செய்பவர்கள் , போன்ற நுகர்வோரை பாதிக்கும் செயற்பாடுகளை செய்வோருக்கு எதிராக நுகர்வோர் சபையானது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
நுகர்வோர் உரிமை மீறல் சம்பந்தமான முறைப்பாடுகளை தெரிவிக்க 1977 மற்றும் 0652228810 என்ற இலக்கங்களுக்கும் அழைப்பினை மேற்கொண்டு தெரிவிக்க முடியும்.
0 Comments:
Post a Comment