12 Nov 2018

மாவட்ட வர்த்தக சங்கத்தை அமைத்து இன ஐக்கியத்துக்கான பணிகளை விஸ்தரிக்குமாறு வேண்டுகோள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்துக்கென ஒட்டு மொத்த மாவட்டத்தையும் தழுவிய வகையில்  மாவட்ட வர்த்தக சங்கத்தை அமைத்து இன ஐக்கியத்துக்கான தமது பணிகளை விஸ்தரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையோடு முன்னெடுக்கப்படும் அனைத்து சமயங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்கிடையிலான மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழுவின் இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் திங்கட்கிழமை 12.11.2018  மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சர்வமத சமாதான செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ்
நாட்டிலே அமைதியைச் சீர்குலைக்கும் பல்வேறுபட்ட விவகாரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

அதில் தொழில்துறை சார்ந்த விடயங்களும் அடங்கும்.
வர்த்தகமும் வியாபாரமும் பல்லின மக்களையும் ஒரே குடையின் கீழ்இணைக்கும் பாலமாக இருக்கின்ற அதேவேளை துரதிருஷ்டவசமாக சிலபோது வியாபார நடவடிக்கைகள் இன மத கண்ணோட்டத்தில் அணுகப்படுவதால் அவை அமைதியின்மைக்கும் தோற்றுவாயாக அமைந்து விடுகின்றன.

எனவே, இந்த விவகாரங்கள் குறித்து தேசிய சமாதானப் பேரவையின் மாவட்;ட சர்வமத குழுக்கள் செயற்பாட்டில் இறங்கியுள்ளன.

அதன் ஒரு செயற்திட்டமாக வர்த்தகத்தினூடாக மக்கள் பிளவுபட்டதற்கான காரணங்கள் என்ன, பிளவுபட்டமைக்கான தோற்றவாய்கள் என்ன அவற்றை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்தி பிளவுபட்ட சமுதாயங்கள் மீண்டும் எவ்வாறு ஒன்றிணையலாம் என்பது குறித்த பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை பிரதேச  மட்டத்திலான வர்த்தகர் சங்கங்களே இயங்கி வருகின்றன.

எனவே,  இவற்றை ஒருங்கிணைத்து எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டால் பிரதேச மட்டத்தில் ஏற்படுத்தப்படும் அமைதிப் பங்கமான செயற்பாடுகளை தவிர்ப்பதற்கு மாவட்ட வர்த்தக சங்க அமைப்பு பலமான ரீதியில் துரிதமாகச் செயற்பட்டு அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளியெறிய முடியும் என்ற காரணத்துக்காக மாவட்ட வர்த்தகர் சங்கத்தின் தேவை குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடத்தில் சமூகத்தின் சகல மட்டத்திலுமுள்ளவர்கள் இணைந்து தீர்மானங்களை எட்டி  அதனை அமுல்படுத்துவதையும் உறுதிப்படுத்த வேண்டும். ” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: