9 Oct 2018

வாகரையில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் உலருணவு விநியோகமும்.

SHARE
மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓமடியாமடு கிராமத்தில் சூறைக்காற்றினால் பாதிக்கப்பட்ட 71 குடும்பங்களுக்கு தமது வீடுகளைத் திருத்தியமைப்பதற்கான கொடுப்பனவுகளும் உலருணவு நிவாரணமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை பிற்பகல் 08.10.2018 வாகரைப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.ஹரன் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகளையும் உலருணவு நிவாரணத்தையும் வழங்கி வைத்தார்.

கடந்த ஜுலை மாதம் 03ஆம் திகதி ஓமடியாமடுப் பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றினால் அங்குள்ள விவசாயக் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

இந்த இயற்கை இடரில் சிக்கி அந்தக் கிராமத்திலிருந்த விவசாயிகளின் சுமார் 71 வீடுகள் சேதமடைந்திருந்தன.

அந்த வகையில் சேத மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகளில் மொத்தம் 4 இலட்சத்து முப்பத்தையாயிரத்து 600 ரூபா பணம் இழப்புக்கேற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் முதற்கட்டமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து 71 குடும்பங்களுக்குமாக மொத்தம் 1 இலட்சத்து 96 ஆயிரத்து 200 ரூபாய் பெறுமதியான இரண்டாம் கட்ட உலருணவு நிவாரண விநியோகமும்  வழங்கி வைக்கப்பட்டது.

அரிசி, கோதுமை மா, சீனி, தேயிலைத்தூள் பருப்பு ஆகிய பொருட்கள் உலருணவுப் பொதியில் உள்ளடக்கப்பட்டு பயனாளிக் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கல் மற்றும் உலருணவு நிவாரண விநியோக நிகழ்வில் பிரதேச அனர்த்த நிவாரண  சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே. புவிதரன்;, சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. நஜீம்,  சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான என். கணலோஜினி, ஜே.ஆர். புலேந்திரராசா, கிராம சேவை அலுவலர் எஸ். தெய்வேந்திரன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.












SHARE

Author: verified_user

0 Comments: