விவசாயிகளுக்கு நன்மையளிக்கும் விதமாக இனிமேல் உரத்தையும் அத்தியாவசியப் பொருளாக உள்ளீர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
உரத்தை அத்தியாவசியப் பொருளாகப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அது விடயமான முன்னெடுப்புக்களில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஈடுபட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சந்தைகளில் கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதையும் அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதையும் தடுக்கும் முகமாகவே விவசாய அமைச்சு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
சில வர்த்தகர்கள் உரத்தை பல்வேறு விலைகளுக்கு விற்பனை செய்வதாகவும் மேலும் சிலர் பல உர வகைகளைக் கலந்து கலவை செய்யப்பட்ட உரமாக கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வர்த்தகர்களை முற்றிகையிடுவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
கூடுதலான விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான விற்பனை அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும் என்று உர நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தர்.
அரசாங்கம் ஒரு ஏக்கர் நெல் விவசாயத்திற்கு 5000 ரூபாவை உரமானியமாக வழங்குகின்றது. ஆகக் கூடியது ஒரு விவசாயிக்கு ஐந்து ஏக்கருக்கே உரமானியம் கிடைக்கும். தற்போது ஒரு 50 கிலோகிராம் கொண்ட உரப்பையை 500 ரூபாவுக்கு அரசு உர மானியமாக வழங்குகின்றது.
அதேவேளை 5 ஏக்கருக்கு மேல் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தமக்குத் தேவையான 50 கிலோகிராம் கொண்ட உரப்பையை சந்தையில் 1500 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்வதற்காக அரசு சலுகை அளித்துள்ளது.
0 Comments:
Post a Comment