வடக்கு கிழக்கு இணைக்க வேண்டும் என்பது அறிவினமான வாதம் எனவும் கருத்து
நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப எமது தலைமுறை கட்சி (English: Our Generation Party – Sinhala - அபே பரபுர பக்ஷய) என்ற பெயரில் புதியதொரு கட்சி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு கொம்மாதுறையில் ஸ்தாபிதம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
கட்சி ஆரம்பிக்கப்பட்டதை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தும் விதமாக கொம்மாறுறை நிருத்தியா விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் நோக்கம் கொள்கைகள், மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
சிதம்பரம் கருணாநிதி என்பரைத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கட்சியின் பொதுச் செயலாளராக தயாளன் அல்போன்ஸ் என்பவரும் பொருளாளராக வேலுப்பிள்ளை சுமங்களா நியமிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு தமது கட்சியின் கொள்கை விளக்கத்தை வெளியிட்ட தலைவர் கருணாநிதி மேலும் கூறியதாவது, வடக்கு கிழக்கு இணைக்க வேண்டும் என்பது அறிவீனமான வாதம், ஏனென்றால் வடக்கு கிடக்கில் இரண்டு முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கிடைக்க வேண்டிய வாய்ப்பை இந்த இணைப்புக் கோரிக்கை என்பது இல்லாமலாக்கி விடும் எனவும் தெரிவித்தார்.
மேலும், முடிவுறாமலும், எதுவித தீர்வுமில்லாமலும் தொடர்கதையாகியுள்ள நாட்டு மக்களின் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல் வழிநடத்தல்கள் இல்லாத குறை நீண்ட காலமாக நிலவி வருகின்றது.
சம காலத்தில் அவசியமும் அவசரமுமான இத்தேவையைக் கருத்திற் கொண்டு எழுந்த சிந்தனையொட்டத்தின் அடிப்படையிலும் மக்களின் ஆதங்கத்தின் அடிப்படையிலும் புதிய போக்கில் சிந்தித்து செயற்படக் கூடிய மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் கட்சியொன்றின் தேவை உணரப்பட்டுள்ளது.
அதன் காரணமாக புத்தாக்கம் மிக்க புதிய அரசியல் கட்சியாக எமது தலைமுறைக் கட்சி எனும் பெயரில் இக்கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.
இந்த தேசத்தின் அடுத்து வரும் தலைமுறை அழிவுகளைக் கடந்து ஆக்கபூர்வமாக இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.
இன, மத, சாதி. மொழி, பிரதேச, பால் ரீதியான அனைத்து வகைப் பாகுபாடுகளையும் ஓரங்கட்டல்களையும் களைந்து நேசம் மிக்க தேசத்தின் புதல்வர்களாக புதல்விகளாக அமைதியும் அபிவிருத்தியும் மிக்க இலக்கை நோக்கிச் செல்வதே இக்கட்சியின் குறிக்கோளாகும்.
தொடர்ச்சியான இயங்கு திறனுடனும் அடிப்படையில் சில கொள்கை வகுப்புக்களுடனும் செயற்படுவதற்கு ஏற்றாற்போல எமது கட்சி முன் கொண்டு செல்லப்படும்.
இக்கட்சியில் பதவி வகிப்போரின் குடும்ப அங்கத்தவர்களுக்கு எவ்விதத்திலும் எவ்விதமான பதவிகளும் வழங்கப்பட மாட்டாது.
முற்று முழுதாக குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் கட்சியே எமது தலைமுறை கட்சி.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கே சந்தர்ப்பம் வழங்கப்படும் எக் காரணம் கொண்டும் குடும்ப அங்கத்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.
கட்சி பதவிகளில் கடுமையான நோயுற்றவர்களும் இயங்க முடியாத வயோதிபத்தை அடைந்தவர்களும் பதவியில் இருந்து ஒதுங்கிக் கொண்டு திடகாத்தரமான, ஆளுமையுள்ள, அறிவாற்றலுள்ள, திறமையானவர்களுக்கும் அப்பதவி வழங்கப்பட வேண்டும், இதுபோன்று இன்னும் பல புதிய அரசியல் கலாசாரங்கள் இக்கட்சியூடாக நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
எனவே எதிர்வரும் காலங்களில் அமைதியை விரும்பும் இலங்கையர் அனைவரும் புதிய தலைமுறைக் கட்சியில் இணைந்து நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரத்தை வழங்குவதில் பங்களிப்புச் செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
0 Comments:
Post a Comment