18 Apr 2018

கிழக்கு மாகாண விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர்களின் தரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.இலங்கை ஆசிரியர் சங்கம்

SHARE
கிழக்கு மாகாணத்திலுள்ள விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர்களின் பாடத்துறைக்குரிய தரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் 18.04.2018 மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2017ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகின்ற விஞ்ஞான 
பாடத்திட்டத்திற்கிணங்கவும், 2019ம் ஆண்டிலிருந்து க.பொ.த (உஃத) பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்காகவும்  பொறுப்புக்கூறலுடனான வகைசொல்லல் பற்றி விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர்களுக்கு  கல்வி அமைச்சினால்  தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தரமான கல்விக்கான இப்பாடத்துக்குரிய ஆசிரிய ஆலோசகர்கள் விஞ்ஞான பட்டதாரியாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் விஞ்ஞானப்பாடத்துக்குரிய ஆசிரிய ஆலோசகர்கள் பெரும்பாலானோர் கலைப்பட்டதாரியாக உள்ளமை தெரியவந்துள்ளது.

இது தேசிய கல்விக் கொள்கைளை நடைமுறைப்படுத்துவதற்கும் உயர்தரத்துக்கு விஞ்ஞான மாணவர்களைத் தயார்படுத்துவதற்கும் தடையாக உள்ளது.

கல்வி அமைச்சின் 16ஃ2018 ஆம் இலக்க 2018.03.20 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல் பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள கற்றல் பெறுபேறுகளின் ஊடாக உரிய விடயப்பரப்புக்களின் கீழ் கற்றற் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டிய எல்லைகளை மாணவர்களுக்கு தயார்படுத்துவதற்கும், மேற்பார்வை செய்வதற்கும் தேசிய கொள்கைளை நடைமுறைப்படுத்துவதற்கும் விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர்களின் பங்கு முக்கியமானது.

ஆயினும் இத்தேசிய கொள்கையை கலைப்பட்டதாரிகளால் முன்னெடுக்க முடியாது என்பதை சம்பந்தப்பட்டோர் கவனத்திற் கொள்ள வேண்டும்.

மேலும் மாகாண விஞ்ஞான பாட இணைப்பு அதிகாரிகள் விஞ்ஞான கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக மாணவர்களுக்கு விசேட செயலமர்வுகளை வலய மட்டங்களில் முன்னெடுக்க வேண்டும்.

எவ்வாறாயினும், விஞ்ஞானம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடத்துறைகளுக்குரிய கல்வி நிர்வாகப் சேவையைச் சேர்ந்த விசேட ஆளணியினர் சேவைப் பிரமாணக்குறிப்புகளுக்கு முரணாக கிழக்கு மாகாண கல்வி;த் திணைக்களங்களில் சேவைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆயிரம் பாடசாலை வேலைத்திட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள விஞ்ஞான கல்வியின் முக்கியத்துவம் கிழக்கு மாகாணத்தில் தோல்வி கண்டுள்ளதாகவும் பொன்னுத்துரை உதயரூபன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: