11 Apr 2018

மட்டக்களப்பு வலையிறவுப்பாலத்தில் தெருவிளக்கு பொருத்தப்படவேண்டும்.

SHARE
(விஜய்)

மட்டக்களப்பு மாவட்டம் பூகோளரீதியில் நோக்கும் போது சமதளம் கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வனம்கொழிக்கும் பிரதேசமாகும். இம்மாவட்டம் நிலத்தோற்ற அடிப்படையில் படுவான்கரை, எழுவான்கரை என இருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. படுவான்கரையையும், எழுவான்கரையும் நிலத்தொடர்புகளுடன் இணைப்பது பாலங்களாகும். அந்த வகையில்  பட்டிருப்புபாலம், மண்முனைப்பாலம், வலையிறவுப்பாலம், செங்கலடி-பதுளைவீதிபாலம், என்பன முதன்மையான பாலங்களாகும். இவ்வாறு படுவான்கரையையும், எழுவான்கரையையும் பாலங்கள் இணைந்திருப்பதால் பொதுமக்களின் போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் போக்குவரத்துக்கள் சிறப்பாகவிருக்கும்போதுதான் ஒரு மனிதசமூகம் வளர்ச்சியடைந்துள்ள சமூகமாக மாற்றமடையும் என்பது உண்மையாகும். அந்தவகையில் வலையிறவுப்பாலம் மட்டக்களப்பில் முதன்முதலாக கட்டப்பட்ட பாலமாகும். 1972 ஆம் ஆண்டு ராஜன் செல்வநாயகத்தால் வலையிறவுப்பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டி வைத்தது மட்டும்தான் பாலம் அமைப்பது கைகூடவில்லை. 1982 ஆம் ஆண்டு மீண்டும் அப்போதைய பிரதேச அமைச்சர் செல்லையா இராசதுரை என்பரால் மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது. இருந்தும் இம்முயற்ச்சியும் மீண்டும் கைகூடவில்லை. அதன்பின்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஆகியோர்களின் வழிகாட்டல்களுடன் 110 மில்லியன் ரூபா நிதியில் கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் 2013.10.28 ஆம்திகதி கட்டிமுடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இவ்வலையிறவுப்பாலம்  இரண்டு கிலோமீற்றர் நீளம் உடையதாகும். இதில் தொடராக இரண்டு பாலங்கள் உள்ன. மண்முனை வடக்கு பிரதேச செயலகம், வவுணதீவு பிரதேச செயலங்களின் எல்லையாகவும் உள்ளது. இப்பாலத்தில் நீண்டநாட்களாக தெருவிளக்கு பொருத்தப்படவில்லை. மழைகாலங்களில் இப்பாலத்தின் வழியாக போக்குவரத்து செய்யமுடியாமல் பிரதேசத்தில் பெய்கின்ற மநீர் வயல்வெளியாக ஓடி ஆற்றைச் சென்றடையும். ஆற்றில் அதிகமான மழையினால் நீர்மட்டம் அதிகரிக்கும் நீர்மட்டத்தினாலும், மழையினாலும் வலையிறவுப்பாலத்தின் இடையே உள்ள வீதியில் சுமார் 5அடி நீர் மேவிப்பாயும். இதனால் படுவான்கரைக்கும், எழுவான்கரைக்குமான போக்குவரத்து அக்காலப்பகுதியில் துண்டிக்கப்படுவது வழக்கம். பொதுமக்கள் மழைகாலங்களில் தங்களின் தேவைகள், சேவைகளையும் பெறுவதற்கும், அரசாங்க ஊழியர்கள் கடமையை மேற்கொள்ளுவதற்கும் படகு மூலம்தான் போக்குவரத்து செய்வதுமுண்டு. மழைகாலங்களில் வானம் முகில் கூட்டங்களாக இருள் சூழ்ந்து காணப்படும்.இதனால் இவ்வீதியினை பயன்படுத்தும் மக்கள் இப்பாலத்தினால் இருளில் போக்குவரரத்தை மேற்கொள்ளும் நிலையாகவுள்ளது.

வலையிறவுப்பாலத்தின் ஊடாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரச திணைக்கள, அரசசார்பற்ற உத்தியோகஸ்தர்கள் என விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தும் இப்பாலத்திற்கு தெருவிளக்கு பொருத்தும் சிந்தனை யாருக்கும் இதுவரையும் வரவில்லையா என பிரயாணிகளும், பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர். 

வவுணதீவுப் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர்கள் இருந்தும் இப்பாலத்தின் குறைபாடுகள், தேவைகள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்து தெருவிளக்கு பொருத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் என பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர். 

எனவே இப்பாலத்திற்கு தெருவிளக்கு பொருத்திக் கொடுத்தால் அப்பிரதேசம் மக்களின் போக்குவரத்திலும் பிரகாசம் ஏற்படும் என எதிர்பார்க்கின்றார்கள்.


SHARE

Author: verified_user

0 Comments: