முற்பது வருடகால யுத்தம் முடிவுற்ற பின்னும் வடக்கிலும் கிழக்கிலும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகி வருகின்றது. இதற்குக் காரணம் வடக்கிலும் கிழக்கிலும் பாரிய தொழிற் பேட்டைகளும் தொழில் வாய்ப்புக்களும் உருவாக்கப்படாமையே! என இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் தெரிவித்துள்ளார்.
அருண்காந்த் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு ஞாயிற்றுக் கிழமை (01) அனுப்பிவைத்துள்ள அவசர கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது… நாட்டில் சுமார் முற்பது வருடகால போர் ஓய்ந்துவிட்டது என்று கூறுவதில் எந்தப்பயனும் இல்லை. காரணம் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் புதிய தலைமுறையாகிய இளைஞர்களும், யுவதிகளும் விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டனர். இவ்விளைஞர்கள் சதாகாலமும் தாம் எவ்வாறு வெளிநாடொன்றிற்கு இங்கிருந்து சட்டபூர்வமாகவோ அல்லது சட்டபூர்வமற்ற முறையிலோ தப்பிச்சென்று பணம் சம்பாதித்து தமது குடும்பங்களை காப்பாற்றுவது என்ற குறிக்கோளிலேயே உள்ளனர். வடக்கில் ஒரு நிச்சயமற்ற நிரந்தரமற்ற சூழல் வேண்டுமென்றே உருவாக்கப் பட்டுள்ளது.
வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு கபினட் அமைச்சர்கள் உள்ளபோதும் இதுவரை இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்யும் எந்தவிதமான தொழில் பேட்டைகளோ அல்லது அரச துறைகளில் வேளைவாய்ப்புக்களோ உருவாக்கப்படவோ வழங்கப்படவோ இல்லை. இதன் விளைவாகவே விரக்தியுற்ற இளைஞர் சமூகம் பல்வேறு சமூகவிரோத கும்பல்களிடம் தஞ்சமடைந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. எனவே தமிழ் மக்களது ஏகோபித்த ஆதரவில் தெரிவுசெய்யப்பட்ட இந்நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்புக்களை உறுதிசெய்வதோடு அவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் இந்நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றேன். என்று அவரது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments:
Post a Comment