3 Apr 2018

பதவியேற்ற மறுநாளே காத்தான்குடி நகரசபைத் தலைவரால் அதிரடி நடவடிக்கை

SHARE

காத்தான்குடி நகர சபையின் தலைவர் பதவியேற்ற மறுதினமே “நகரைத் தூய்மையாகப் பேணும்” அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருப்பது நகரத் திண்மக் கழிவுகளால் சங்கடப்படுவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
செவ்வாய்க்கிழமை 03.04.2018 பொழுது புலரும்போது காத்தான்குடி நகர கடைத்தெருவுக்கு தனியாக திடீர் விஜயம் செய்த காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச். அஸ்பர் அங்கு மட்டக்களப்பு – கல்முனை பிரதான போக்குவரத்து மார்க்கத்தில் வீதி மருங்குகளில் கடைகளுக்கு முன்னால் வீசப்பட்டு கிடந்த கடைகளில் சேரும் குப்பைகளை படமெடுத்துக் கொண்டதுடன், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கெதிராக சூழலை மாசுபடுத்தியதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

வர்த்தக நிலையங்களில் சேரும் உக்கும், உக்காத இருவகைக் கழிவுகளையும் தரம் பிரித்து அவற்றைத் தெருவுக்குக் கொண்டு வராமல் புறம்பாக வைத்திருந்து நகரசபையின் திண்மக் கழிவகற்றல் வாகனம் வரும்போது மாத்திரமே அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்ற நகர சபையின் ஒழுங்கு விதிகள் இருக்கும்போது அவற்றை கருத்திலெடுக்காது சூழலை அசிங்கப்படுத்துவதோடு பிரதான வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் குடியிருப்பு வீடுகள் என்பனவற்றுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வண்ணம் நகர வர்த்தக நிலையங்களிலுள்ள ஒரு சிலரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

எனவே, இந்த நிலைமையை மாற்றியமைத்து நகரையும் சூழலையும் தூய்மை மாறாது பேணுவதோடு நகருக்கு வரும் மற்றும் அங்கு வாழும் மக்களின் சுகாதாரத்தையும் சௌகரியத்தையும் உறுதிப்படுத்துவது அனைவரின் பொறுப்பாகும் என்றும் நகரசபைத் தலைவர் தெரிவித்தார்.

இதுபோன்று திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ நிகழ்ச்சி நிரலின் கீழ் காத்தான்குடி வர்த்தக நகர், குடியிருப்புப் பகுதிகள், கடற்கரை, பொது மற்றும் பொழுது போக்கிடங்களைத் தூய்மையாகப் பேணும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெற்றி பெற்ற பத்து உறுப்பினர்களும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு திங்கட்கிழமை 02.04.2018 தமது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தனர்.

காத்தான்குடி நகர சபைத் தலைவராக எஸ்.எச். அஸ்பர் மற்றும் பிரதி தவிசாளராக எம்.ஐ.எம். ஜெஸீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: