10 Apr 2018

வாகரை பிரதேச சபைத் தலைவர் தெரிவு செய்யப்பட்ட சற்று நேரத்தில் தலைவரும் உறுப்பினரும் கைது, தாக்குதல் சம்பவமே காரணம்.

SHARE
மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேசசபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய சற்று நேரத்தில் அதன் தலைவரும் மற்றொரு உறுப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பாகவே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் உடனடியாக வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே கதிரவெளி கிராம சேவகர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வாகரைப் பிரதேச சபையின் தலைவர் சிவஞானம் கோணலிங்கம் என்பவரும் மற்றொரு உறுப்பினரான தெய்வேந்திரன் சத்தியநாதன் என்பவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களை அனுப்பி வைக்கும் உப முகரான தோப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 02ஆம் திகதி வாகரை கதிரவெளிப் பிரதேசத்தில் வைத்து வழி மறித்துத் தாக்கப்பட்டதில் அவர் படு காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர கண்காணிப்புப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளானவர் தன்னைத் தாக்கிய நபர்கள்பற்றி பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கதிரவெளிப் பிரதேச கிராம சேவகர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு கடந்த 05ஆம் திகதி தொடக்கம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் தலைமறைவாகியிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 10.04.2018 பிரதேச சபைத் தெரிவுக்கு சமுகமளித்துள்ளனர்.

அவ்வேளையிலேயே தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவரும் மற்றொரு உறுப்பினரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் கதிரவெளி வட்டாரத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவுசெய்யும் அமர்வு செவ்வாய்கிழமை (10.04.2018) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம் தலைமையில் நடைபெற்றது. வட்டார அடிப்படையில் 11 பேரும் விகிதாசார அடிப்படையில் 07 பேருமாக 18 பேர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் 5 பேரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் 3 பேரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 5 பேரும்,  தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 2 பேரும்,  தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு சார்பில் ஒருவரும்;, விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மானின் ) சுயேட்சைக் குழு சார்பில் இருவரும்; தெரிவாகியிருந்தனர்.

தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் தெரிவுக்கான திறந்த வாக்கெடுப்பினை மேற்கொள்வது என உறுப்பினர்களினால் தீர்மானிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் சிவஞானம் கோணலிங்கம் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் கண்ணப்பன் கணேஷன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதையடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கதிரவெளி வட்டாரத்தைச் சேர்ந்த சிவஞானம் கோணலிங்கம் 10 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கண்ணப்பன் கணேஷன் 8 வாக்குகளைப் பெற்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூவரில் இருவரும், ஐக்கிய தேசிய கட்சியைச் உறுப்பினர்கள் இருவரும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரும் வாக்களித்தனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு கருணா அம்மானின் சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் இருவரும்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தார்.

உதவித் தவிசாளர் தெரிவிற்கான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து புணாணை கிழக்கு வட்டாரத்தைச் (இரட்டை அங்கத்தவர் வட்டாரம்) சேர்ந்த தி.மு. சந்திரபாலன் மற்றும் எஸ்.  முஹம்மத் தாஹிர் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
பகிரங்க வாக்கெடுப்பில் தி.மு.சந்திரபாலன் 10 வாக்குகளைப் பெற்று உதவித் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட  ச.முகமட் தாஹிர் 08 வாக்குகளைப் பெற்றார்.









SHARE

Author: verified_user

0 Comments: