துறைநீலாவணை கிராமோதய சுகாதார மருத்துவமாது நிலையத்திற்கு சுற்றுமதில் அமைத்துத்தருமாறு அப்பகுதிவாழ் பொதுமக்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
மண்முனைதென் எருவில் பற்றுகளுவாஞ்சிகுடி பொதுச் சுகாதாரகாரியாலய நிருவாகத்துக்குட்பட்ட துறைநீலாவணை கிராமோதய சுகாதார தாய் சேய் மருத்துவமாது நிலையம் பலவருடகாலமாக சுற்றுமதில் இல்லாத நிலையில் அசௌகரியத்திற்கு மத்தியில் இயங்கிவருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக பலதடவைகள் மட்டு மாவட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளிடமும் தெரியப்படுத்தியும் இது வரைகாலமும் எதுவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்காது மௌனம் காப்பதாக மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கடந்த சிலவருடங்களுக்கு முன்னதாக மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட உதவியினால் குறித்தகட்டிடத்திற்கு முன்னால் உள்ள நுழைவாயில் எல்லை துறைநீலாவணை சமுகபொருளாதார கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்டன.
மிகக் குறைந்தளவான எல்லையை உள்ளடக்கிய குறித்த கட்டித்திற்கு சுற்றுமதில் அமைப்பதற்கு கோரிக்கை விடுத்தும் ஏன் இது வரைக்கும் கவனம் எடுக்கப்படவில்லையென்பது அப்பகுதி பொதுமக்களின் கேள்வியாகும்.
துறைநீலாவணைக் கிராமம் எல்லைக் கிராமம் என்பதனால் இக்கிராமத்தின் அபிவிருத்திகள் அரசியல் வாதிகளின் கண்களுக்கு புலப்படுவதில்லை குறித்தகட்டிடம் அமைந்துள்ள வளாகத்தில் கடந்த காலங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடியவகையில் அபாயநிலை காணப்பட்டமை குறிப்பிட்டு சுட்டிக் காட்டப்பட வேண்டியவிடயமாகும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மட்டுமாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் தமக்கு வழங்கப்படுகின்ற அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் துறைநீலாவணைக் கிராமத்திலுள்ள தாய், சேய் மருத்துவமாது நிலையத்திற்கு சுற்றுமதில் அமைப்பதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
0 Comments:
Post a Comment