6 Mar 2018

மனிதர்கள் மனிதர்களுடனும் இயற்கையுடனும் ஒத்திசைந்து வாழவில்லையெனில் அழிவுகள் அதிகரிக்கும் கிழக்குப் பல்கலைக்கழக அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெயசங்கர்

SHARE
மனிதர்கள் மனிதர்களுடனும் இயற்கையுடனும் ஒத்திசைந்து வாழவில்லையெனில் அழிவுகள் அதிகரிக்கும் என கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெயசங்கர் தெரிவித்தார்.
சமகாலத்தில் சகவாழ்வுக்கான சூழ்நிலைகள் குழப்பப்பட்டு வரும் நிகழ்வுகள் தொடர்பில் அவர் திங்கட்கிழமை 05.03.2018 கருத்து வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது,
பாரம்பரிய வைத்தியர்கள், பல்வகைத் தொழிற்துறைசார் தொழிநுட்ப நிபுணர்கள், வேளாண் அறிஞர்கள், புலவர்கள், பண்டிதர்கள், சாரிகள், அண்ணாவிமார், மாந்திரிகர்கள், மருத்துவிச்சிகள், கதைசொல்லிகள், கலிபாடிகள், தின்பண்டங்கள் செய்யும் நிபுணர்கள், மூலிகை நிபுணர்கள், கலை, கைவினைக் கலைஞர்கள் என மானிடர்கள் பலர் இன மத வேறுபாடுகளுக்கப்பால் சேவையாற்றி வந்ததை சரித்திரம் நமக்குப் புகட்டுகிறது.

இந்த அறிவு முறைகள் உயர்கல்வி மரபுக்குள் உள்வாங்கப்படுவதும்; இக்கல்வி முறைகள் பற்றிய அறிமுகத்தையும் அறிவையும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி மரபுக்குள் கொண்டு வருவதும் சூழல்நட்புக் கொண்டதும், பொருளாதாரத்தில் தங்கிநிற்றல் நிலை நீக்கம் பெற்றதும் மக்கள் மயப்பட்டதுமான சமூக உருவாக்கங்களுடன் எமது வாழ்க்கை முறை வடிவமைக்கப்படவேண்டும்.

சமூகங்கள் மேற்படி விடயம் சார்ந்து சிந்திப்பதும் செயற்படுவதும்; மேற்படி முன்னெடுப்புக்களுடன் உலகின் பல்வேறு சமூகங்களுடனும் தொடர்புகொண்டு இயங்குவதும் மனிதர்களை மனிதர்களுடனும், இயற்கையுடனும் ஒத்திசைந்து வாழ்வாங்கு வாழ்வதற்கான அறிவுச் செயற்பாடாக அமையும் என்பது உன்னத எதிர்பார்ப்பு.

இது சமூக ஜீவியுடன் கூடிய கற்றல் செயற்பாடுகளின் அடிப்படை.
மேற்படி அறிவுமுறைமைகள் வாய்மொழி மூலமான அனுபவ அறிவுப் பகிர்வுக்கு உரியதாகவும் ஏடுகளில் எழுதப்பெற்று பரம்பரை பரம்பரையாகப் பேணப்பட்டு வருபவையாகவும் மிகப் பெரும்பாலும் காணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேற்படி அறிவுமுறைகளைக் கையாளுவதற்கு அவசியமான அறிவும் பயில்வும் தேவைப்படுகின்றது.

வாய்மொழி அறிவுத் திறன்களை அறிந்து பதிவு செய்து புதிய ஊடகங்களுக்கு கொண்டு வருதல்; கிரகித்தலையும், நினைவில் வைத்தலையும் அடிப்படையாகக் கொண்ட அறிவுமுறைப் பயில்வு என்பன இங்கு அவசியமாகின்றன.” என்றார்.
   

SHARE

Author: verified_user

0 Comments: