இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக தங்களுடைய எதிர்காலம் குறித்த கேள்விகளோடும் அச்சத்தோடும் பீதியோடும் வாழ்வதாக நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஏறாவூர், மீராகேணி கிராமத்தில் கட்டார் நாட்டின் கட்டார் சரிற்றி (ஞயுவுயுசு ஊர்யுசுஐவுலு(QATAR CHARITY) நிறுவனத்தினால் நிதியளிக்கப்பட்ட தலா 8,50000 ரூபாய் பெறுமதியான 22 வீடுகள், உட்பட பள்ளிவாசல், கிளினிக் நிலையம், கடைத் தொகுதி, முன்பள்ளி ஆகியவற்றை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை 17.03.2018 பிற்பகல் இடம்பெற்றது.
அங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
ஒரு புறத்திலே நாங்கள் அபிவிருத்தி செய்கின்றோம், மறுபுறத்திலே அழிவுகளையும் சந்திக்கின்றோம்.
இந்தவிதமான இயற்கை அனர்த்தங்கள் ஒருபுறம், மனித நாசவேலைகள் மறுபுறம்.
இவ்வாறு பலவிதமான சிக்கல்களுக்கு மத்தியில் இந்த நாட்டின் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு இந்த நாட்டிலே வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக தங்களுடைய எதிர்காலம் குறித்த கேள்விகளோடு அச்சத்தோடும் பீதியோடும் வாழ்கின்றன.
அதிலும் குறிப்பாக அண்மையிலே நடந்தேறி முடிந்த சம்பவங்களின் பின்னால் ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும்; இருக்கிற ஒரு காலகட்டத்தில் நாங்கள் இந்த வீட்டுத் திட்டத்தை மக்களிடம் கையளிக்கின்ற நிகழ்விலே பங்கு கொள்கின்றோம்.
என்னைப் பொறுத்தமட்டிலே நடந்து முடிந்தஇந்த அழிவுகளுக்கு எவ்வளவுதான் இன வாதிகளும், இதிலே ஈடுபட்ட அக்கிரமக்காரர்களும் பொறுப்புச் சொல்ல வேண்டுமாக இருந்தாலும் கூட, அதைவிட முக்கியமாக அரசாங்கம் இதற்குப் பொறுப்புக் கூறியாக வேண்டும்.
கடந்த சில நாட்களாக அம்பாறையிலும் கண்டியிலும் நடந்த இந்த மனித நாச அழிவுகள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கின்றபோது சென்ற இடமெல்லாம் தங்களுக்கு நஷ்டஈடு தருமாறு மக்கள் கேட்கின்றார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களின் இந்த வேண்டுகோள் நியாயமானது என்பதால் அரசாங்கம் முழுமையான நஷ்ட ஈட்டை மக்களுக்கு வழங்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் வெறுமனே ஒரு அடையாத்திற்கு மாத்திரம் நஷ்ட ஈட்டைக் கொடுத்துவிட்டு இருந்து விட முடியாது.
வழங்கும் நஷ்ட ஈடு இழந்த அனைத்தையும் மீட்டுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது குறித்து இப்பொழுது நாங்கள் அரசியல் தலைமைகள் எல்லோரும் மிகத் தீவிரமாக கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.
திங்கட்கிழமை 19.03.2018 நண்பகல் முஸ்லிம் அமைச்சர்களையெல்லாம் கூட்டுமாறு நான் பிரதமரிடம் வினயமாகக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
அடையாள ரீதியிலான நஷ்ட ஈட்டை திங்கட்கிழமை வழங்கப் போகின்றார்கள்.
ஆனால் அதனால் பாதிக்கப்பட்ட யாரும் ஆறுதலடையப் போவதில்லை.
அதேவேளை, தாங்கள் பாதிக்கப்பட்டமைக்கான முழுமையான நஷ்டஈட்டை மக்களுக்கு வழங்கினாலும் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான ஆறுதலாகி விடாது.
இந்தக் குற்றச் செயல்களில், அக்கிரமங்களில், அநியாயங்களில் ஈடுபட்டவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நாட்டின் நலனுக்கு மேலானது.
நாசகாரச் செயலுக்கு தண்டனை இல்லாமல் இனி இந்த விவகாரத்துக்கு முடிவு காண முடியாது.
வெறுமனே சாட்டுக்கு நீதிமன்றத்திலே அவர்களைக் கொண்டு நிறுத்தி பிணை வழங்கி கொஞ்சக் காலத்திலே இவற்றை எல்லாம் மறந்து விடுகின்ற அணுகுமுறையோடு இந்த விடயத்தைக் கையாள முடியாது.
அதேநேரம் முஸ்லிம்கள் சம்பந்தமான தேவையில்லாத கருத்துக்களைப் பரப்பிக் கொண்டு திரிகிற குழுக்களுக்கும் மதவாத இயக்கங்களுக்கும் உண்மையைத் தெளிவு படுத்துகிற பணியை அரசாங்கமே முன்வந்து செய்ய வேண்டும்.
இதனை முஸ்லிம் சமூகம் எவ்வளவுதான் சொன்னாலும் அதனைக் கேட்பதற்கோ அதனுடைய யதார்த்தத்ததைப் புரிந்து கொள்வதற்கோ முடியாத மிக மோசமான ஒரு இனவாதக் கும்பல்களோடுதான் நாங்கள் பல வருடங்களாகப் போராடிக் கொண்டு வருகின்றோம்.
இந்த விடயத்தில் அரசாங்கத்தில் இருக்கின்ற நாங்கள் வெட்கித் தலைகுனிந்தவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம்.
தீவிரவாத சிந்தனை என்பது பேரினவாத மக்களிடத்தில் மாத்திரமல்லாது சமயத் தலைவர்களிடத்திலும் வேரூன்றி விட்டது.
தப்பபிப்பராயம் ஏற்படும்பொழுது உண்மையைக் கூறும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எவ்வளவோ காலம் கடந்துதான் ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை இல்லை, அது சாத்தியமில்லாத விடயம் கொத்து ரொட்டியில் கருத்தடை மாத்திரை கலக்க முடியாது என்பதில் அரசாங்கம் வாய் திறந்திருக்கிறது.” என்றார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, கட்டார் சரிற்றி முகாமையாளர் காலித் கௌத்தான், ஐ.எஸ்.ஆர்.சி. உதவி அமைப்பின் தவிசாளர் ஏ.எம். மிஹ்லார், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர், பைத்துஷ் ஸக்காத் நிறுவனத் தலைவர் எம்.எஸ். பஷீர், ஏறாவூர் ஸலாமா சமூக நலன்புரி நிறுவனத்தின் தலைவர் எஸ்.ஏ. நழீம் உட்பட இன்னும் பல அதிதிகளும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment