11 Mar 2018

சிறுவர் பராமரிப்பு இல்லத்திலிருந்த 4 சிறுவர்கள் இரண்டு கடைகளை உடைத்து இரண்டு தினங்கள் திருட்டு

SHARE
ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள சந்திவெளிப் பிரதேசத்தில் இரண்டு கடைகளை உடைத்து பணம், பொருட்கள் திருட்டில் ஈடுபட்டது சம்பந்தமாக 4 சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 11.03.2018 கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட ஒரு தொகைப் பணம், மற்றும் சுமார் 35 க்கு மேற்பட்ட கைப்பேசிகள், 2 டப்கள், கமெரா, அலைபேசி பற்றரி சார்ஜர்கள், அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் என்பனவற்றுடன் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களும் 10 தொடக்கம் 14 வயதிற்கிடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூரட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் அவர்களின் நெறிப்படுத்தலில், குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி நிரோஸன் பெர்னான்டோவின் வழிகாட்டலில் ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வு அதிகாரி சார்ஜன்ற் ஈசாலெப்பை பதூர்தீன் தலைமையிலான பொலிஸ் அணியினர் வசிசாரணைகளைத் துரிதப்படுத்தினர்.

சந்திவெளி பிரதேசத்திலுள்ள ஒரு அலைபேசி விற்பனை நிலையம் மற்றும் உணவு விடுதி ஒன்று ஆகியவை சனிக்கிழமை இரவு 10.03.2018 கூரை அகற்றி காணொளிக் கமெரா உடைக்கப்பட்டு கடைகளிலிருந்த பொருட்களும் பணமும் திருடப்பட்டுள்ளது சம்பந்தமாக பொலிஸார் காணொளிக் கமெராவில் பதிவான படங்களை வைத்து விசாரணைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அவ்வேளையில் கடைகளின் கூரையைக் கழற்றி திருட்டில் ஈடுபட்டவர்கள் பற்றி காணொளிக் கமெராவில் பதிவான படங்களை வைத்து விசாரித்தபொழுது அந்தப் படங்களில் தெரிந்த சிறுவர்கள் அப்பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் விசாரிக்கப்பட்ட பொழுது திருடியவற்றில் அவர்கள் தமது உறவினர் நண்பர்களுக்குக் கொடுத்தது போக சுமார் 4800 ரூபாய் மீதிப் பணம் உட்பட மேற்சொன்ன எண்ணிக்கையில் அலைபேசிகள், டப்கள், ஒரு தொகை மீள் நிரப்பு அட்டைகள், கமெரா, சார்ஜர்கள் என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

பராமரிப்பு நிலையத்திலும் வேறு இடங்களிலுமாக வைக்கப்பட்டுள்ள திருடப்பட்ட மேலும் சில அலைபேசிகளையும் பணத்தையும் கைப்பற்றும் விசாரணைகளில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

தனது அலைபேசி விற்பனை நிலையத்தை வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு இரவுகளிலும் மேற்படி சிறுவர்கள் சாதுரியமாக கூரை பிரித்து உட்புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக அதன் உரிமையாளர் நவரெட்ணம் விஜந்தன் (வயது 32) பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.







SHARE

Author: verified_user

0 Comments: