ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை கணேச வித்தியாலய வீதியை அண்டிய பகுதியின் கொட்டில் ஒன்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலத்தை மீட்டு உடற் கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை 21.02.2018 காலை மீட்கப்பட்ட இச்சடலம் அப்பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சண்முகரெத்தினம் பிரதீபாவினுடையது என பெற்றோர் அடையாளம் காட்டியுள்ளனர்.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த யுவதி அப்பகுதியிலுள்ள கடையொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார்.
வழமை போன்று கடைக்குச் செல்பவர் புதன்கிழமை கடைக்குத் தயாராகவில்லை என பெற்றோர் தேடியபோது வீட்டோடு சேர்ந்ததாக அமைக்கப்பட்டிருந்த கொட்டிலுக்குள் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தகவல் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் விரிவான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
இந்த யுவதியை திருமணம் செய்வதாக உறுதியளித்திருந்த நபர் தான் வெளிநாட்டுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்ல வேண்டும் உத்தேசத்தை யுவதியிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி சுமார் 2 இலட்ச ரூபாய் பணத்தை யுவதி வட்டிக்கு கடனாகப் பெற்று செலுத்தி வந்ததாகவும் கடைசியில் அந்த ஆண் நண்பர் வெளிநாடு செல்வதைக் கைவிட்டு விட்டதாகவும் இதனால் யுவதி தான் பெற்றுக் கொடுத்த கடன் தொகையை செலுத்த முடியாமலும், நம்பிக்கைத் துரோகத்தால் விரக்தியடைந்திருந்ததாகவும் உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment