ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பொது வைத்திய நிபுணரை மீண்டும் பெற்றுத் தரக்கோரி பொது மக்கள் பொது அமைப்புக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று புதன்கிழமை 21.02.2018 ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நடாத்தப்பட்டது.
பல்வேறு பௌதீக வள குறைபாடுகளுக்கு மத்தியில் வைத்தியர்களின் பற்றாக்குறையுடனும் இயங்கி வரும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஏற்கெனவே கடமையில் இருந்து வந்த பொது வைத்திய நிபுணர் கடந்த திங்கட்கிழமை முதல் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் வைத்தியர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு வைத்திய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
உடனடியாக பதிலீடு செய்யப்பட்டு பொது வைத்திய நிபுணர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தற்போதிருக்கும் வைத்திய அத்தியட்சகரை இடம்மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரி நின்றனர்.
இதன் பின்னணி பற்றி தெரியவருவதாவது, மேற்படி பொது வைத்திய நிபுணரான யாமினி டி சில்வா என்பவர் தங்கியிருந்த விடுதிப் பக்கம் பட்டாசுகள் விழுந்து கனதியான சப்தங்களுடன் வெடிக்கத் துவங்கியதாகவும்,
இது வைத்தியருக்கு அசௌகரியத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை அவ்விடுதியில் கூரை ஓடுகள் மற்றும் வேலிகள் சேதப்படுத்தப்டுவதாகவும் கூறியுள்ளதோடு
இதுபற்றி அவ்வைத்தியர் தனது மேலதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.
வைத்தியரின் அசௌகரியத்தை பரிசீலித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் சங்கச் சிபார்சுக்கமைய அவ்வைத்தியரை அவரது சௌகரியத்திற்கு ஏற்றவாறு கடமை புரியும் வண்ணம் சுகாதார அமைச்சுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment