2 Jan 2018

இளவயதுக் கர்ப்பத்தைத் தடுக்கும் வகையில் இணைந்து பணியாற்ற முயற்சி சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராசசிங்கம்

SHARE
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள  கிராமப்புற முஸ்லிம் பிரதேசங்களில் இளவயதுக் கர்ப்பமடைதல் பற்றி அறிவூட்டுவதற்குத் தோதாக பிரதேச செயலகம், மற்றும் விவாகப் பதிவாளர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராசசிங்கம் தெரிவித்தார்.
ஏறாவூர் சகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இளவயதுக் கர்பப்ந்தரிப்புகள் அதிகரித்துள்ளது சம்பந்தமாக புள்ளிவிவரங்களைத் தெரிவித்த அவர் செவ்வாய்க்கிழமை 02.01.2018 மேலும் தெரிவித்ததாவது,
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின்  பின்தங்கிய கிராமப் புறங்களில் இளவயதுத் திருமண வீதம் அதிகமாகவுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில் கடந்த வருடத்திற்கு முந்தைய வருடம் (2016) ஏறாவூரில் 992 மகப்பேறுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 49 மகப்பேறுகள் இளவயதுக் கர்ப்பமடைதலால் ஏற்பட்டவைபயாகும். இது ஒட்டு மொத்த மகப்பேற்றில் 4.9 என்ற வீதமாகும்.

அதேவேளை கடந்த ஆண்டு (2017) இந்த இளவயது மகப்பேறு ஒட்டு மொத்த மகப்பேறில் 6.7 என்ற வீதமாக அதிகரித்துள்ளது.

2017ஆம் ஆண்டு ஏறாவூரில் 1063 மகப்பேறுகள் கிடைக்கப்பெற்றுள்ள அதேவேளை இவற்றில் 72 மகப்பேறுகள் இளவயதுக் கர்ப்பத்தினால் ஏற்பட்டவையாகும்.
19 வயதிற்குட்ட காலத்தில் கர்ப்பம் தரித்தலே இளவயதுக் கர்ப்பம் எனப்படுகின்றது.
இந்த இள வயதெல்லையில் திருமணம் செய்தல் என்பது தாய் சேய் மற்றும் சமூக ஆரோக்கியத்திற்குக் கேடானது.

உடலும் உள்ளமும் முதிர்ச்சியடையாத நிலையில் ஒடியாடி விளையாடித் திரிந்து சந்தோசமாக கல்வி கற்கும்  கட்டிளமைக் கால கட்டத்தில் திருமணம் செய்வித்து குடும்பப் பொறுப்பையும் பொருளாதாரச் சுமையையும் சிறுமிகள் மீது சுமத்தினால் அது தாங்க முடியாது.

ஒரு பெண்ணின் ஆரோக்கிய நிலையை எடுத்துக் காட்டுவது உடற் திணிவுச் சுட்டி. அது  18.5 என்ற அளவில் இருக்க வேண்டும். அந்த அளவில் இருந்து அது குறைவடைந்தால் பெண்ணின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கொள்ள முடியும்.
இளவயதுத் திருமணம் செய்து கொள்ளும் சிறுமிகள் அனைவருக்கும் உடற் திணிவுச் சுட்டி என்பது 18.5 என்ற அளவை விடக் குறைவானதாகவே இருக்கின்றது.
இளவயதுத் திருமணத்தின் மூலம் குறை மாதத்தில் நிறை குறைந்த பிள்ளைகள்  பிறக்கும். அதனால் அனீமியா எனப்படுகின்ற குருதிச் சோகை நோய் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும்.

பெண்ணுக்கு ஆரோக்கியமான உணவுகள் தேவை, அதேவேளை, அவளது கருவில் வளர்கின்ற வயிற்றுக் குழந்தைக்கும் ஆரோக்கியமான தேவை.

பிறக்கும் சாதாரணமான ஒரு குழந்தையின் நிறை 2.5 கிலோ கிராம் ஆகும். ஆனால் இளவயதுச் சிறுமிகள் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஒருபோதும் இந்த நிறையை அடைவதில்லை.

இதனால் தாய்க்கும் சேய்க்கும் பாதிப்புக்கள். அதிகம் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.

எனவே இதுபற்றி ஒட்டுமொத்த சமூகமும் அக்கறை கொள்ள வேண்டும்.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: