தேசியக் கட்சிகள் எவற்றுக்கும் சோரம்போகாமலும் ஸ்தாபகர் அஷ்ரப் வகுத்த வியூகத்திலேயே தடம் புரளாமலும் தனித்துவம் பேணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பயணிக்கிறது என அக்கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் ஞாயிற்றுக்கிழமை 21.01.2018 இடம்பெற்ற ஏறாவூர் நகரசபையைக் கைப்பற்றும் வியூகத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகப் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இதயமாக இருக்கின்ற பகுதிகளிலும் கூட ஸ்ரீலங்கா மஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுகின்றது.
ஏனையோர் எமது கட்சி சோரம்போய் விட்டதாகக் கருகின்ற விடயத்தை அரசியல் வியூகத்தின் ஒரு பகுதியாகவும் சாணக்கியத்தின் கருப்பொருளாகவும் அரசியல் விற்பன்னர்கள் கருதுகிறார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அதன் வரலாறு நெடுகிலும் அதன் தனித்துவத்தை இழக்கவில்லை. சமகால நகர்வுகளின் போக்கை நாடி பிடித்தறிந்து சமயோசிதமான சிந்தனை மூலம் அது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பல அரசியல் வியூகங்களை வகுத்துச் செயற்பட்டு வந்திருக்கின்றது.
இத்தகைய ஒரு அரசியல் ஞானத்தோடு எமது ஸ்தாபகத் தலைவர் மர்ஹ{ம் அஷ்ரப் அவர்கள் அதன் சமூகப் போராளிகளை வழிநடாத்தி வந்திருக்கின்றார்கள் என்பதை அதன் கடந்த கால வரலாறுகளிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.
அரசியல் ரீதியான வியூகங்களில் நாம் ஒருபோதும் தோற்றுப்போனதில்லை.
அரசியல் வியூகம் அமைப்பதில் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் வெற்றி கண்டிருக்கின்றார்கள்.
அவரது ஆளுமை மிக்க தலைமைத்துவத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த எதிர்க்கட்சி ஆளும் கட்சி எல்லோரது காலத்திலும் நாம் சரியான வியூகங்களை வகுத்து அரசியல் ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்திருக்கின்றோம்.
இதற்கு சிறந்த அரசியல் சாணக்கியம் வேண்டும். மக்களின் மன நிலையையும் கள நிலைவரங்களையும் நாடி பிடித்து அறிய வேண்டும்.
தற்போதும் எமது சமகாலத் தலைமைத்துவம் இந்த நுட்பங்களை நன்கு அறிந்து உள்ளுராட்சித் தேர்தல் களத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் செர்ந்துள்ளது.
முடிவுகள் அறிவிக்கப்படுகின்றபோது நாட்டிலுள்ள 70 சதவீதமான உள்ளுராட்சி சபைகளின் அடுத்து வரும் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றும். அப்போது நாம் அந்த ஆட்சியில் இருப்போம்.
இந்த கள நிலவரங்களைப் புரிந்து கொள்ளாமல் நாம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு விலை போய் விட்டோம் என குழப்பங்களை உண்டு பண்ணப்பார்ப்பது அவர்களுக்கே முட்டாள் தனமாக அமையும்.
எங்கெங்கெல்லாம் நாம் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்பது தெளிவான விடயம் அந்தப் பயத்தில் எதிராளிகள் கொக்கரிக்கிறார்கள்.
சின்னாபின்னப் பட்டுப்போயுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து பிரயோனமில்லை. அதனால்தான் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆட்சியமைக்க கூட்டுச் சேர்ந்துள்ளோம்.
ஆட்சியதிகாரத்தில் பங்கேற்பதற்காக 1989 இல் தொடங்கிய எமது வியூகம் இன்றுவரை தோல்வி கண்டதில்லை.” என்றார்.
0 Comments:
Post a Comment