நாட்டின் நிரந்தர அமைதிக்கும் ஐக்கியத்திற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் இலங்கை நாணயத் தாள்களின் கலையம்சங்களில் பல்லின சமத்துவம் பேணப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக ஆய்வாளர் ரகுநாதன் சீதா தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்று வந்த காண்பியற் கலையினூடாக சமூகப் பிரக்ஞையை வெளிப்டுத்தும் இறுதி நிகழ்வின்போது அவர் புதன்கிழமை 27.12.2017 இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இதுபற்றி மேலும் குறிப்பிட்ட காண்பியற் கலை இறுதியாண்டு மாணவியும் துறைசார் பயிற்சி ஆய்வாளருமான சீதா,
“இலங்கையின் நாhணயத் தாள்களில் நாட்டைப் பிரதிபலிக்கும் விடயங்களான பண்பாட்டுச் சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலும் அதனை மற்றவர்களுக்கு அறியப்படுத்தலும்” என்ற நோக்கில் எனது ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இக்கண்காட்சிக்காக இலங்கையின் பண்டைய கால மரபுரிமைகளை வெளிக்காட்டும் நாணயத்தாள் தொடர் (1991 – 2005),
அபிருத்தி சுபீட்சம் மற்றும் இலங்கை நடனக்கலைஞர்கள் தொடர்பான தொடர் (2010),
இலங்கை சுதந்திரம் பெற்று 50வது ஆண்டு நிறைவுக்காக வெளியிடப்பட்ட 200 ரூபா ஞாபகார்த்த நாணயத் தொடர்,
சமாதானம் மற்றும் சுபீட்சத்துக்காக அச்சடிக்கப்பட்ட நாணயத் தொடர் (2009),
இலங்கையின் மாவட்டங்களை பிரதிபலிக்கும் நாணயத்தொடர் (2013),
போன்ற தலைப்புகளின் அடிப்படையில் காட்சிப்படுத்தியிருந்தேன்.
இலங்கை நாணயத் தொடர்களில் எமது நாட்டைப் பிரதிபலிக்கும் வளம், பண்டைய மரபுரிமை, பொருளாதாரம் மற்றும் மக்களின் கலை கலாசார வெளிப்பாடுகள் உள்ளடக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய விடயமாக உள்ளது.
இருந்த போதிலும், பல்லின மக்கள் வாழும் இலங்கையில், பெரும்பான்மை இனத்தவர்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலையம்சங்களை உள்ளடக்கி பிரசுரிக்கப்பட்டிருப்பது வெளிப்படை.
சிறுபான்மைகளின் கiலாசார வெளிப்பாடுகளைப் புறந்தள்ளி பெரும்பான்மையை மாத்திரம் கருத்திற் கொண்டு இவ்வாறு செயற்பட்டிருப்பது நாட்டின் பல்லினத் தன்மைக்கும், நிரந்தர அமைதிக்கும் சுபீட்சத்திற்கும் ஊக்கியாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆகவே எதிர்காலத்தில் அச்சடிக்கப்படும் இலங்கை நாணயத் தாள்களில் பல்லினத் தன்மைக்கும், சகவாழ்வுக்கும், சமாதானத்திற்கும் வழிகோலும் சாதகமான கலையம்சங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதையே சகவாழ்வை விரும்புவோர் எதிர்பார்த்து நிற்கின்றனர்.
நாணயத் தாள்களை நாமெல்லோரும் நாணிக் கொள்ளும் வகையிலல்லாமல் இன கலாசார பற்றுதலோடு புழக்கத்தில் வைத்திருக்க வழிகண்டாக வேண்டும்” என்றார்.
0 Comments:
Post a Comment