தமிழரின் ஆய கலைகளில் ஒன்றான யோகா கலையின் சிறப்பை உணர்த்தும் முகமாகவும் மட்டக்களப்பில் யோகா கலையை பிரபல்யப்படுத்தும் நோக்குடனும் கிராமங்கள் தோறும் யோகா ஆரோக்கிய நிலையங்கள் திறக்கப்பட்டு வருவதாக யோகா ஆரோக்கிய இளைஞர் கழக செயலாளரும் யோகா கலை பயிற்சியாளருமான எல். தீபாகரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை 25.10.2017 மேலும் தெரிவித்த அவர்,
தற்போதைய இயந்திர மற்றும் இலத்திரனியல் யுகத்தில் பல்வேறு உடல் உள ஆரோக்கியக் கேட்டை மனிதர்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் எதிர்கொள்ள நேரிடுகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு சுய அமைதி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இத்தகைய யோகா கலை பயிற்சி நிலையங்களைத் திறந்து பயற்சியளிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் எதிர்வரும் சனிக்கிழமை 28.10.2017 மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் ஜனாகேசா யோகா ஆரோக்கிய வாழ்வுக் கழகப் பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதில் வார நாட்களில் காலை 5.30 தொடக்கம் காலை 6.30 மணிவரையும், வார இறுதி நாட்களில் காலை 7 மணி தொடக்கம் காலை 8 மணிவரையிலும் இலவசமாக யோகா ஆரோக்கிய வாழ்வுக் கலைப் பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.
மட்டக்களப்பில் ஏற்கெனவே யோகா கலை விற்பன்னர் கலாபூஷணம் செல்லையா துரையப்பா அவர்களின் வழிநடத்தலில் நாவற்குடா, பூம்புகார், கூழாவடி, கொக்குவில், முறகொட்டான்சேனை ஆகிய இடங்களில் கிராமங்கள் தோறும் யோகா கலை என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன” என்றார்.
0 Comments:
Post a Comment