27 Oct 2017

தகவல் தொழில்நுட்பத்துறையூடாக வியாபாரத்தினை மேம்படுத்தும் செயலமர்வு, கண்காட்சி

SHARE
கிழக்கு மாகாணத்திலுள்ள சிறிய நடுத்தர வணிக முயற்சியாளர்களுக்கான தகவல் தொழில்நுட்பத்துறையூடாக வியாபாரத்தினை மேம்படுத்தல் தொடர்பிலான  செயலமர்வும் கண்காட்சியும்  வியாழக்கிழமை (26) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.
கனேடிய உலக பல்கலைக்கழகம், ஐ.சீ.ரீ.ஏ. கிழக்கு மாகாணத்திலுள்ள தொழில்நுட்பத்துறைசார் நிறுவனங்கள் இணைந்து இந்தச் செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு, திரகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் சுற்றுலாத்துறை, கணணி, மோட்டார் வாகன, கட்டுமானத்துறைகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்களின் 150 இற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் இச் செயலமர்வில் பங்கு கொண்டனர்.

கனேடிய உலக பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எஸ்தர் மகிண்டோஸ் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வு மற்றும் கண்காட்சியில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம, அம்பாறை மாவட்ட தொழிலாளர் ஒன்றிணைந்த மையத்தின் தலைவர் கலாநிதி அன்வர் எம்.முஸ்தபா, மட்டக்களப்பு கணணி தொழில்நுட்ப மற்றும் காட்சிப்படுத்தல் தொழில்நுட்பவியலாளர் அமைப்பின் தலைவர் வி.ஆர்.மகேந்திரன், மற்றும் திருகோணமலை அமைப்பின் தலைவர் இசார மதுசங்க, கலாநிதி எஸ்.அனுசியா சேனாதிராஜா ஆகியோரும் அதிதிகளாகக்கலந்து கொண்டனர்.

வளவாளர்களாக கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.சாபீத், எக்ஸ்ரீம் எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் சரண்யன் சர்மா, மைக்ரோசொப்ற் பயிற்சியாளர் எம்.விகனராஜ், வடமாகாண கணணித்துறை அமைப்பின் பணிப்பாளர் தவரூபன் உள்ளிட்டோரும் பங்கு கொண்டனர்.

இன்றைய இலத்திரனியல் உலகில் சிறிய நடுத்தர நிறுவனங்கள் எவ்வாறு  புதிய தொழில் நுட்பங்களைக் கையாளுதல் வேண்டும். வியாபார முன்னேற்றத்துக்காக சமூக ஊடகங்களின் பங்களிப்பு, நிறுவனங்கள் எதிர் கொள்ளுகின்ற தொழில்நுட்பம் சார் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலும் நடைபெற்றது. இதன் போது தொழில்நுட்பத்துறைசார் பல்வேறு பட்ட சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

சிறிய நடுத்தர வணிக மற்றும் முயற்சியாளர்களின் தொழில் துறை மேம்பாடு கருத் கனேடிய உலக பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்திட்டத்தின் ஒருபகுதியாகவே இந்த கிழக்கு மாகாணத்திலுள்ள சிறிய நடுத்தர வணிக முயற்சியாளர்களுக்கான தகவல் தொழில்நுட்பத்துறையூடாக வியாபாரத்தினை மேம்படுத்தல் தொடர்பிலான  செயலமர்வும் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
















 


SHARE

Author: verified_user

0 Comments: