(க.விஜி)
துறைநீலாவணை சுப்பர்கிங் சம்பியன் கிண்ணத்தை மகிழூர் பயணியர் விளையாட்டுக் கழகம் சுவீகரித்துக் கொண்டது.எட்டு ஓவர்களை கொண்ட அணிக்கு 11பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது துறைநீலாவணை சுப்பர்கிங் விளையாட்டுக் கழகம் துறைநீலாவணையில் நாடாத்தியது.
துறைநீலாவணை சுப்பர்கிங் விளையாட்டுக்கழகமானது தனது 15 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டியை துறைநீலாவணை மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கடந்த மூன்று வாரங்களாக நடாத்தியது.இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் 32 விளையாட்டு கழகங்கள் பங்குபற்றியது.
இந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதிச்சுற்றுப் போட்டிக்கு மகிழூர் பயணியர் விளையாட்டுக் கழகமும்,துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக் கழகமும் தெரிவு செய்யப்பட்டன.
இறுதிப்போட்டி நிகழ்வானது துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.நாணயச்சுழற்ச்சியில் வெற்றி பெற்ற துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக் கழகம் துடுப்பெடுத்தாடியது.சம்பியண் கிண்ணத்தை தனது அணி சுவீகரிக்க வேண்டும் எனும் இலக்கோடு உத்வேகத்துடன் துடுப்பெடுத்து ஆடியது.
இதனால் சிவசக்தி விளையாட்டுக்கழகம் சகல விக்கட்டுக்களையும் இழந்து 25 ஓட்டங்களை தமது அணிக்கு பெற்றுக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியே வந்தது.பதிலுக்கு துடுப்பெடுத்து களமிறங்கிய மகிழூர் பயணியர் விளையாட்டுக் கழகம் 26 ஓட்டங்களை இலக்காக கொண்டு விளையாடத் தொடங்கியது.இதன்போது குறுகிய ஓட்டங்களை மட்டுப்படுத்தி தனது இலக்கான 26 ஓட்டங்களை ஒன்பது(1.3ஓவர்) பந்துக்களால் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து 2017 ஆம் ஆண்டில் சம்பியண் அணியாக தெரிவு செய்யப்பட்டது.
இந்த மென்பந்து சுற்றுப்போட்டியானது துறைநீலாவணை சுப்பர்கிங் விளையாட்டு கழகத்தின் தலைவர் சுப்பிரமணியம்-மனோராஜ் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் துறைநீலாவணை மெதடிஸ்த மிசன் தமிழ் பாடசாலையின் அதிபர் கு.மனோகரன்,துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர் கே.கோபாலன்,பிரதேச சுற்றாடல் உத்தியோகஸ்தர் மா.சதீஸ்குமார்,ஊடகவியலாளர் க.விஜயரெத்தினம்,மற்றும் ச.வாசுதேவன்,கே.ஆயிசான் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்துகொண்டார்கள்.
இந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பயணியர் விளையாட்டு கழகத்தினர் 26 ஓட்டங்களை குவித்து போட்டியில் வெற்றி பெற்று 10,000 பணப்பரிசும் சம்பியன் கிண்ணத்தையும் தட்டிக்கொண்டது.சிவசக்தி விளையாட்டுக் கழகம்(Runnerup ஆக தெரிவு செய்யப்பட்டது) 5000 பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் தட்டிக்கொண்டது.இந்த மென்பந்து சுற்றுப்போட்டியில் தொடர் ஆட்ட நாயகனாக பீ.லக்சனும்,ஆட்டநாயகனாக கே.ரவிராஜ்யும்,சிறந்த பந்து வீச்சாளராக ஆர்.டினேஸ்காந்தும் தெரிவு செய்யப்பட்டார்கள்.இவர்களுக்கும்,விளையாட்டுக்கழகத்திற்கும் வெற்றிக்கேடயங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment