இன மத வேறுபாடில்லாத இரத்த வங்கி இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு ஒரு அற்புதமான உதாரணமாகும் என சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெயசுந்தர பண்டார தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியசாலைப் பணிப்பாளர் எம்.எஸ். இப்றாலெப்பை தலைமையில் சனிக்கிழமை 08.04.2017 பிற்பகல் இடம்பெற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு மருத்துவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்வில் மாணவர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சமூக சேவைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய பணிப்பாளர்,
நான் மிகவும் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த மிகவும் வறுமைக்குட்பட்ட குடும்பத்திலிருந்து இந்த நிலைக்கு வந்தவன்.
உள நல ஆலோசனைப் புத்தகங்கள் எதுவும் படித்திராத தேயிலைக் கொழுந்து பறிக்கும் ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்துதான் எனது தாய் என்னையும் எனது சகோதரர்களையும் வளர்த்து ஆளாக்கினார்.
வறுமைக்குட்பட்ட குடும்பப் பின்னணியாக இருந்தும் கூட அந்தக் காலத்தில் உள்ள தாய்மார் தமது பிள்ளைகளை நல்ல ஒழுக்க விழுமியங்களும் ஆளுமையும் உள்ளவர்களாக தங்களைத் தியாகம் செய்து வளர்த்தார்கள்.
நானும் அப்படித்தான் எனது தாயால் பேணிப் பாதுகாத்து பண்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டேன். அதனை நினைத்து நான் பெருமையடைகிறேன்.
துரதிருஷ்டவசமாக தற்கால இயந்திர வாழ்க்கை யுகத்தில் பெற்றோர் தங்களது குழந்தைகளை பராமரிக்க, உபசரிக்க நேரம் இல்லாமல் போய் விடுகின்றது.
இத்தகைய ஓட்டிசத்தால் பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்களைப் பராமரிப்பதற்கென்று நாடு முழுவதிலும் உள்ள 9 மாகாணங்களில் தலா ஒரு பராமரிப்பு நிலையத்தை உருவாக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, துரதிருஷ்டவசமாக எமது நாட்டில் இடம்பெற்ற ஆயுத முரண்பாடுகள் மனிதர்களைப் பிரித்து வைத்துப் பராமரிக்கும் நிலைக்கும் இட்டுச் சென்றுள்ளது.
ஆனால், எமது இரத்த வங்கியில் குருதிக் கொடையாளர்களால் வழங்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற இரத்தத்தை எந்த நிபுணரும் பிரித்தறிந்து அது தமிழர்களுடையது முஸ்லிம்களுடையது சிங்களவர்களுடையது என்று அடையாளப்படுத்தி விட முடியாது.
எந்த சமூகத்தவர் கொடுத்த இரத்தம் எந்த சமூகத்தவரின் உயிரைக் காக்கின்றது என்று கூட யாரும் அறிய மாட்டார்கள்.
இதுதான் மனித வாழ்வின் யதார்த்தம்.
இந்த நாட்டில் தேவையற்ற இன முரண்பபாடுகள் எதற்காக முனைப்புப் பெறுகின்றன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
இயற்கை எவ்வளவோ அற்புதமாக எங்களை வாழ வழி காட்டியிருக்கும்போது நாம் அர்த்தமற்ற முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு எங்களுக்குள் அழிவுகளைத் தேடிக் கொண்டு அவஸ்தைப் படுகின்றோம்.
நீண்டு வளர்ந்த மரங்களிடையே பற்றிப் பிடித்துக் கொள்ள ஆசைப்படும் அற்பக் கொடிகள் தங்களைச் சுற்றிப் பிடித்து வளர்வதற்கு மரங்கள் தங்களது கிளைகளை வளைந்து கொடுத்து உதவுகின்றன.
இதைப்போல பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்போர் பரஸ்பரம் வளைந்து கொடுத்து உதவ வேண்டும்.
இதில் பால், இன, மத, மொழி, பிரதேச, வயது வித்தியாசங்கள் இருக்க முடியாது.
தற்போது இளம் சமுதாயத்தினர் மத்தியில் எத்தனையோ கெடுதலான விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன.
நாளாந்தம் பார்க்கிறோம், கேட்கிறோம், செவிமடுக்கிறோம், கற்றுக் கொள்கின்றோம். இதனால் எமது வாழ்நாளும், வளங்களும், சுகமான சமாதானமான வாழ்வும் வீணாக அழிந்து போகின்றன.
எனவே, எமது வளம் கொழிக்கும் இந்த நாட்டை இளம் சமுதாயத்தினராகிய மாணவர்கள் ஆண், பெண், இனம், மதம், மொழி, பிரதேசம் என்ற எந்த வித வித்தியாசமின்றி மேலும் வளமாக்க வேண்டும்.” என்றார்

0 Comments:
Post a Comment