அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் மத நிகழ்வு ஒன்றில் வழங்கப்பட்ட இலவச உணவை உட்கொண்டு பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 600 இற்கு மேற்பட்டோரில் இதுவரை 4 பேர் மரணித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பலர் அக்கரைப்பற்று அம்பாறை, இறக்காமம், கண்டி ஆகிய வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளியிடங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 30 இற்கும் அதிகமான வைத்தியர்களும் தாதியர்களும் இரவு பகல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இறக்காமம், வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் வியாழக்கிழழை இடம்பெற்ற கந்தூரி நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் அங்கு பரிமாறப்பட்ட உணவை உட்கொண்டதன் காரணமாகவே உபாதைக்கு உள்ளாகினர்.
பாதிப்புக்குள்ளானவர்கள் உடனடியாக இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட அதேவேளை விஷேட சிகிச்சை தேவைப்பட்டோர் அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் கண்டி வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நால்வர் மரணமாகியுள்ளனர்.
இவ்வாறு கண்டிக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்களில் மூன்று கற்பிணித்தாய்மார்களும் உள்ளடங்குகின்றனர்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் நேரடியாக இறக்காமம் மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இறக்காமம் பொலிஸார் மற்றும் அம்பாறை தலைமையக பொலிஸாரும் விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment