5 Mar 2017

கிழக்கு மாகாண சபையின் அடுத்த ஆட்சியும் தமிழர் முஸ்லிம்கள் இணைந்த நல்லாட்சியாகத்தான் இருக்கும் என்று நான் சவால் விடுக்கின்றேன். கிழக்கு முதலமைச்சர் அறைகூவல்

SHARE
கிழக்கு மாகாண சபையின் அடுத்த ஆட்சியும் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து கோலோச்சும் நல்லாட்சியாகத்தான் இருக்கும் என்று தான் சவால் விடுப்பதாக கிழக்கு மாகாண
முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிலுள்ள ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு, மற்றும் மகப்பேற்றுப்; பிரிவு கட்டிடத் தொகுதி என்பன திறந்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை 04.03.2017 இரவு இடம்பெற்றபோது அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்@

கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் ஸ்ரீலமுகா தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையில் நாம் சனிக்கிழமை (04.03.2017) புரிந்துணர்வுக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினோம்.
வழமையாக முறுகல்களாகப் பார்க்கின்ற சூழ் நிலைகளைத் தவிர்த்து பரஸ்பர நட்புறவுடன் ஆக்கபூர்வமானதாக இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது.
கல்முனை நகரத்தை அங்கு வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து  எவ்வாறு ஒற்றுமையாக அபிவிருத்தி செய்யலாம் என்பதைப் பற்றியதாகவே இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது.
இது ஒரு சாதகமான மாற்றம்.
தமது பிரதேசங்களுக்குள் பல்வேறு வேலைத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

அத்துடன் இன ஐக்கியத்திற்கும் பரஸ்பர ஒத்துழைப்பிற்கும் விட்டுக் கொடுப்புடன் மனம் விட்டுத் தங்களது பிரச்சினைகளையும் தேவைகளையும் கண்டறிந்து கொள்வதற்கு முன்வந்ததையிட்டு இரு சாராரும் திருப்திப் பட்டுக்கொள்ளும் அளவிற்கு நகர்வுகள் இடம்பெற்றன.

இச்சந்தர்ப்பத்தில் கல்முனைப் பிரதேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் காட்டிய தமது பிரதேசத்தின் தேவைகள் அபிவிருத்திகள் உடனடியாக நிறைவேற்றிக்  கொடுக்கப்பட வேண்டும் என்று நான் கல்முனை மாநகர ஆணையாளருக்கு உத்தரவிட்டேன்.

அதேநேரம் ஸ்ரீலமுகா தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீமும் அவரது நிதி ஒதுக்கீட்டில் கல்முனை தமிழ்ப் பிரதேச பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள், அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்காக நிதி ஒதுக்கீடுகள் செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை அவர் எடுத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாங்கள் கிழக்கு மாகாண சபையிலே ஏற்படுத்தியிருக்கின்ற நல்லாட்சியின் பயன்கள் மாகாண சபையோடு மட்டும் நின்று விடாது தமிழ் முஸ்லிம் மக்கள் எங்கெல்லாம் வாழுகின்றார்களோ அங்கெல்லாம் பிரதிபலிக்க வேண்டும். அதன் நன்மைகளை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்திலே தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் இணைந்துள்ள இந்த நல்லாட்சி இந்த மாகாணத்திலே மக்கள் மனதில் பெரிய நெகிழ்வுத் தன்மையை வளர்த்துள்ளதோடு பரஸ்பர நட்புறவுக்கும் சமாதானத்திற்கும் இன ஐக்கியத்திற்கும் வழிவகுத்துள்ளது.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவற்றை நான்கு சுவர்களுக்குள் மனம் விட்டுப்  பரஸ்பரம் பேசித் தீர்ப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்பதற்கான மாற்றங்கள் மக்கள் மனங்களிலே எழுந்துள்ளன.

கடந்த 30 வருடகால யுத்தத்தில் பிளவுபட்டுப்போயிருந்த சிறுபான்மை மக்கள் மத்தியில் இதுவொரு ஒன்றுபட்ட மகத்தான வெற்றி என்றே கொள்ள வேண்டும்.
மாகாண சபையிலே நாங்கள் ஏற்படுத்திய இனங்கள் இணைந்து கொண்ட நல்லாட்சியின் பயனாக அடையப் பெற்ற இந்த வெற்றியை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இனங்களுக்கிடையில் எந்தப் பிரச்சினை இருந்தாலும் அதை மனிதாபிமானத்துடனும் சகோதர வாஞ்சையுடனும் விட்டுக் கொடுப்புடனும் தியாகத்துடனும் அணுக வேண்டும் என்பதை தற்போதைய சூழல் நமக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.

தெளிந்த மனதுடன் வெளிப்படைத் தன்மையுடன் நாங்கள் மாகாண சபை ஆட்சியை நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.

கடந்த வருடம் மார்;ச் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாங்கள் சேர்ந்து ஆட்சியமைத்தபோது அடுத்த மாத மாகாண சபைக் கூட்டத்தை நடாத்த இந்த ஆட்சி நிலைக்காது என்று எங்களுக்குச் சவால் விடுத்தார்கள்.
அவர்கள் ஆரூடம் கூறி இப்பொழுது ஒரு வருடம் கழிந்து விட்டது. நாங்கள் இப்பொழுது அவர்களுக்குச் சவால் விடுக்கின்றோம் அடுத்த மாகாண சபை நிர்வாகமும் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்த நல்லாட்சியாகத்தான் கோலோச்சும் அதனை நாங்கள் சாதித்துக் காட்டுவோம்” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: