3 Feb 2017

பெரியபுல்லுமலை எல்லைக் கிராம பாடசாலைக்கு ஆசிரியர்களை வழங்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்.

SHARE
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பெரியபுல்லுமலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த பல வருடங்களாக ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாகவும் அதற்கு ஆசிரியர்களை நியமிக்கக் கோரியும் அப்பிரதேச மக்கள் வியாழக்கிழமை (02.02.2017)
ஆர்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிரமத்தவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, தாம் இந்தஎல்லைக் கிராமத்திலிருந்து பல கஸ்டங்களை எதிர்நோக்குவதாகவும், இப்பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் பல தடவைகள் கல்வித் திணைக்களத்திற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அறிவித்தும் இற்றவரை இதற்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை எனவும் கூறினர்.

மேலும், இந்தப் பாடசாலையில் கற்பிப்பதற்காக சமீப சில நாட்களுக்கு முன்னர் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டதாகவும் ஆனால், அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

தமது பாடசாலையிலுள்ள ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைக்கு மிக விரைவில் ஒரு தீர்வினை வழங்குமாறு கிராம மக்கள் வேண்டி நிற்கின்றனர்.

க.பொ.த சாதாரண தரம் வரை உள்ள இந்தப்  பாடசாலையில் கடந்த மூன்று வருடங்களாக விஞ்ஞானப் பாடத்திற்கென ஆசிரியர்கள் எவரும் இல்லாமலே தமது பிள்ளைகள் சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியதாக பெரியபுல்லுமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ். செல்வராசா தெரிவித்தார்.
இங்கு தற்போது 7 ஆசிரியர்கள் தேவையாகவுள்ளதாகவும் இதில் 5 ஆரிரியர்களையாவது தந்துதவி தமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெரியபுல்லுமலை எல்லைக் கிராமம் மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

கிராம மக்கள் பாடசாலைக் குறைபாடுகளை முதனிலைப்படுத்தி அதனை நிறைவேற்றித் தருமாறு ஆர்பாட்டததை முன்னெடுத்தபோதும் மக்கள் பிரதிநிதிகளோ கல்வித் திணைக்கள அதிகாரிகளோ அங்கு சமுகமளிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.








SHARE

Author: verified_user

0 Comments: