17 Jan 2017

வியாழனன்று இடம்பெறும் தமிழர் விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்க மட்டக்களப்பு தயார்

SHARE
மட்டக்களப்பில் வியாழக்கிழமை (19.01.2017) கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழர் விழாவுக்கு இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன்
அவர்களை வரவேற்பதற்கு மட்டக்களப்பு தயாராகி விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் தமிழர் விழாவில் ஊர்வலமும், இன்னபிற  தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெறும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

சுபவேளையான வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மட்டக்களப்பு கல்முனை வீதி, கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகும் தமிழர் விழா ஊர்வலத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டவுடன் தமிழர் பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சகலருக்கும் பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: