3 Dec 2016

பொதுபல சேனாவினால் மட்டக்களப்பு கொழும்புக்கு இடையிலான புகையிரத சேவைகள் தடுப்பு (வீடியோ)

SHARE
மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான புகையிரதப் போக்குவரத்தை பொதுபல சேனா அமைப்பினர் சனிக்கிழமை முழுநாளும் தடைசெய்து விட்டதனால் மட்டக்களப்பு கொழும்பு புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக புகையிரத நிலைய அதிபர்கள் தெரிவித்தினர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் நுழைய முடியாதவாறு பொலொன்னறுவை மட்டக்களப்பு மாவட்டங்களில் வழிமறிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் ஞானசாரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு – கொழும்புக்கு இடையிலான புகையிரத சேவையை அசேலபுரவிற்கும் ரிதீதென்ன பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் தடைப்படுத்தியிருந்ததாக புகையிரத நிலைய அதிபர்கள் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து வந்த புகையிரதம் அசேலபுரவிற்கும் ரிதீதென்ன பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் பொதுபல சேனா அமைப்பினரால் தடைப்படுத்தப்பட்டது.
இதனால் கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்ற புகையிரதமும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்ற புகையிரதமும் தடைப்படுத்தப்பட்ட நிலையில் சேவையை நிறுத்திக் கொண்டன.
வாழைச்சேனையிலிருந்து கொழும்பை நோக்கி காலை 11.35 இற்குப் புறப்பட்ட புகையிரதம் பாதுகாப்புக் கருதி புணானை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

கலகமடக்கும் படையினரும், பொலிஸாரும் வழித்துணை வழங்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டதன் காரணமாக பொதுபல சேனா அமைப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்ட புகையிரதம் சனிக்கிழமை மாலை விடுவித்துக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக புணானை புகையிரத நிலைய அதிபர் பேரின்பராஜா தெரிவித்தார்.

வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கின்ற வேளையிலும் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடாத்த அங்குள்ள பிக்கு சனிக்கிழமை பிற்பகல் முயற்சி மேற்கொண்டதால் மட்டக்களப்பு நகரில் சற்று பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

மட்டக்களப்பிலுள்ள மங்களராம விஹாரைக்கு பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மேற்கொள்ள முயற்சித்த வேளையில் அவரது பயணம் மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது.

இவ்வேளையிலேயே மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டத்திற்கு முயற்சித்த வேளையில் பொலிஸார் முழுமூச்சாக குறித்த ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பொலிஸ் பாதுகாப்பு சனிக்கிழமை அதிகாலை முதற்கொண்டு மட்டக்களப்பு நகரின் பல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து மங்களராம விஹாரையை சூழ விருந்த தெருவோரக் கடைகள் பூட்டப்பட்டன. பயணிகள் பதற்றமடைந்தனர். போக்குவரத்து சேவையும் சற்று நேரம் பாதிக்கப்பட்டது.

ஞானசாரர் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை ஏறாவூர் நகரம், புன்னைக்குடா மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தை அண்டிய பதுளை வீதியில் அரச மரம் உள்ள தனியார் காணியொன்றுக்குள் செல்வதாகவும் நிகழ்ச்சி நிரல் இடப்பட்டிருந்தது.

இதனைக் கருத்திற் கொண்டு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்களும் இனவெறுப்புணர்வுகளைத் தூண்டும் சம்பவங்களும் இடம்பெறலாம் என்பதால் கரடியனாறு பொலிஸார் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தி வெறுப்புணர்வைத் தூண்டும் ஒன்று கூடலுக்குத் தடை விதிக்குமாறு கரடியனாறு பொலிஸார் வெள்ளிக்கிழமை நீதி மன்றத்தை வேண்டியிருந்தனர்.

மனுவை ஆராய்ந்த  மாவட்ட பதில் நீதிபதி ஆதம்லெப்பை முஹம்மத் முனாஸ் வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவைத் பிறப்பித்தார்.

மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், ஏறாவூர்ப் பற்று செங்கலடி - பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரச மரம் உள்ள காணிக்குள் கடந்த 16.11.2016 அன்று அத்துமீறி நுழைந்து விஹாரை கட்ட முனைந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

அந்த அரச மரம் உள்ள இடத்தில் புத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத்தலம் அங்கு இருந்ததாகவும் கூறி சர்சைக்குரிய அம்பிட்டிய  சுமணரத்ன தேரர் தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்து கொண்டதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

















SHARE

Author: verified_user

0 Comments: