பகிடிவதையின் பதில் ஒழுங்கு நடவடிக்கையாக கிழக்குப் பல்கலைக் கழக மருத்து பீடத்தின் ஒரு பகுதி கல்வி நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மறு அறிவித்தல்
வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகப் பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் தெரிவித்தார்.
கடந்த வாரம் கிழக்குப் பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவர்கள் சிலர் மோசமான பகிடி வதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக சனிக்கிழமை (26.11.2016) கூடி ஆராய்ந்த பல்கலைக்கழக பேரவை இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி மருத்துவ பீடத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை 27.11.2016 நண்பகல் 12 மணிக்கு முதல் மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தப் பகிடிவதை விவகாரம் தொடர்பாக முதலாமாண்டு மாணவர்களில் 16 பேரும் பகிடிவதை தொடர்பான விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்காமல் உண்மைகளை மறைத்தார்கள் என்ற காரணத்தினால் குறித்த காலப்பகுதிகளுக்குள் விடுதிகளை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் குறித்து பெற்றோருக்கும் பாதுகாவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சீரான கல்வி நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் வண்ணம் சாத்தியமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் பதிவாளர் வலியுறுத்தினார்.
இது விடயமாக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்து அக்குழுவின் ஆலோசனைகளையும் பெற்றதற்கமைவாகவே பல்கலைக்கழகப் பேரவை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த உத்தரவின்படி மருத்துவ பீடத்தின் 2ஆம் 3ஆம் ஆண்டு மாணவர்களும் மற்றும் 1ஆம் வருடத்தின் 16 மாணவர்களுமாக சுமார் 100 மாணவர்கள் தமது விடுதிகளைக் காலி செய்து விட்டு வெளியேற வேண்டி நேரிடும் என்று பல்கலைக் கழக நிருவாகம் தெரிவிக்கின்றது.
0 Comments:
Post a Comment