27 Nov 2016

அபகரிக்கப்பட்ட 1500 ஏக்கர் காணிகளை மீட்டெடுக்க ஒருங்கிணைந்த அரசியல் நடவடிக்கை தேவை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர்

SHARE
அபகரிக்கப்பட்ட ஏறாவூர் விவசாயிகளின்  1500 ஏக்கர் காணிகளை மீட்டெடுக்க ஒருங்கிணைந்த அரசியல் நடவடிக்கை தேவை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மரப்பாலம் “பி” கமநல அமைப்பு விவசாயிகளால் ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்ட காணி மீட்பு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து காணியைப் பறிகொடுத்த விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய அவர்@ பூர்வீகமாக பயிர்ச் செய்கையிலும், நெற் செய்கையிலும் ஈடுபட்டு கடந்த 1990ஆம் இடம்பெயரச் செய்யப்பட்ட மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள விவசாயிகளின் சுமார் 1500 ஏக்கர் காணிகள் தற்சமயம் அதிகாரிகளால் அபகரிக்கபப்ட்டிருக்கின்றன.

இதனை மீட்டெடுக்க அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட போராட்டம் தேவையாகவுள்ளது.

இந்த சமூக நன்மை கருதி ஏறாவூரைச் சேர்ந்தவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்,  ஸ்ரீலமுகா வின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா மற்றும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலமுகா வின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினரான நானும் ஒருங்கிணைய  வேண்டும் என்று நான் விநயமாகவும் பகிரங்கமாகவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

வெறுமனே இந்த விடயத்தில் நான் மட்டும் தனித்து நின்று உரக்கக் குரல் கொடுத்து காணியை இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்து கண்ணீர் சிந்தும் ஏழை விவசாயிகளின் குறைகளைத் தீர்த்து வைக்க முடியாது.

காணிகளை இழந்து கடந்த 30 வருடகாலமாக அலைந்து திரியும் இந்த ஏழை விவசாயிகளிடத்தில் காணி உரித்துக்கான 3 வகையான ஆவணங்கள் கைவசம் இருக்கின்றன.

நாட்டின் ஜனாதிபதி அவர்களால் கையொப்பமிட்டு வழங்கப்பட்ட சொர்ணபூமி உறுதிப் பத்திரங்கள், காணி ஒப்பம், வருடாவருடம் புதுப்பிக்கின்ற மற்றும் வரி செலுத்துகின்ற ஆவணங்களும் விவசாயிகளின் கைகளிலேயே உள்ளன.
1990 ஆம் ஆண்டு இந்த விவசாயிகள் தமது பூர்வீக விவசாய நிலங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதின் பின்னர் அவர்களது காணிகள் அதிகாரிகளாலும் அரசியல் வாதிகளாலும் மிக சூட்சுமமான முறையிலே நன்கு திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளன.

அதனால் இன்றுவரை அந்த ஏழை விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இது ஒரு புறமிருக்க, தமக்குரித்தான காணிகளில் மீண்டும் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்கு உதவுமாறு விவசாயிகள் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்த பொழுது  குறிப்பிட்ட காணிகள் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள பிரதேச செயலாளர், அக்காணிகள் தங்களுக்குச் சொந்தமானதுதான் என உறுதிப்படுத்தும் அக்காணிகளுக்குரிய சகல ஆவணங்களின் மூலப்பிரதிகளையும் போட்டோப் பிரதிகளையும் அவற்றைச் சரிபார்ப்பதற்காக பிரதேச செயலகத்தில் ஒப்படைக்குமாறு பிரதேச செயலாளர் காணியை இழந்து நிற்கும் விவசாயிகளிடத்தில் எழுத்து மூலம் கேட்டுள்ளார்.
இது விவசாயிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் காணிகளையும் அபகரித்ததோடல்லாமல் தங்களிடமுள்ள காணிகளின் ஆவணங்களையும் அபகரித்து அழித்தொழிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கையோ என விவசாயிகள் தமது நியாயமான சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர்.

எனவே, இந்த விடயத்தில் காணிகளை இழந்த விவசாயிகளுக்கு இப்பிரதேச அரசியல் வாதிகள் மற்றும் சட்டத்தரணிகள் முன்வந்து ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
அரச காணிகளை ஆக்கிரமிப்புச் செய்வதையோ அல்லது அடுத்தவரின் காணிகளை அடாத்தாகப் பிடிப்பதையோ இந்த அப்பாவி விவசாயிகள் கோர வில்லை. அவர்கள் தமது சொந்த பூர்வீகக் காணிகளையே மீளப் பெற்றுத் தருமாறு கோரி நிற்கின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: