மட்டக்களப்பு பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடங்கள் பாரியளவில் உள்ளதால், அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை மட்டக்களப்புப் பாடசாலைகளுக்கே மீள நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்
தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் அவர் வியாழக் கிழமை (06) விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது…
தேசிய கல்வியல்கல்லூரிகளில் இருந்து பயிற்சியினைப் பெற்று வெளியேறிய ஆசிரியர்களுக்கான நியமனங்கள் 04.10.2016 இல் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.
அவ்வாறு வழங்கப்பட்டிருந்த போதிலும் கல்குடா, மட்டக்களப்பு மேற்கு, பட்;டிருப்பு வலயங்களிலுள்ள ஆசிரிய வெற்றிடங்கள் அதிகமான அளவில் நிரப்பப்படவில்லை. குறிப்பாகக் கல்குடா, மட்டக்களப்பு மேற்கு வலயங்களில் 450 இற்கு மேற்பட்ட வெற்றிடங்கள் தற்போதும் காணப்படுகின்றன.
இதனால் மாணவர்களின் கல்வியில் பின்னடைவு ஏற்படும் நிலை தொடர்கின்றது. குறிப்பாகக் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களில் வெற்றிடங்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றன. இது தொடர்பாக கல்வியமைச்சர், கல்வி இராஜாங்க அமைச்சர்களிடம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கல்வியமைச்சு தாமதம் காட்டாமல் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆசிரிய வெற்றிடங்கள் நிலவும் வலயங்களிலுள்ள வலயக்கல்விப்பணிப்பாளர்கள், நிருவாகிகள், அதிபர்கள் தமது நிருவாகங்களை மேற்கொள்வதில் ஆசிரியர் வெற்றிடங்கள் பலத்த சவால்களாகவுள்ளன. தொண்டராசிரியர்கள் நியமனங்களை விரைவுபடுத்த வேண்டிய தேவையும் உள்ளது.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை மீளவும் மட்டக்களப்புக்கு நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் வலியுறுத்திக் கேட்டுள்ளதாக அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment