ஈழத்து முஸ்லிம் பெண் எழுத்தாளர் வரிசையில் கிழக்கின் காத்தான்குடியைச் சேர்ந்த காத்தான்குடி பரீதா என்றழைக்கப்படும் மீராஸாஹிபு முஹம்மது பரீதா தனது 59வது வயதில் காலமானார்.
சமீப சில நாட்களாக நோய்வாப்பட்டிருந்த அவர் ஞாயிறன்று காலமானார்.
1958ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் நாளன்று பிறந்த இவர் எழுத்துத் துறையில் மிளிர்ந்த அதேவேளை ஆசிரியராகவும் பின்னர் பதவி உயர்வு பெற்று ஓய்வில் செல்லும் வரை ஆசிரிய ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.
“ஒரு பட்டிக்காட்டுப்பெண் பல்கலை கழகம் போகிறாள், அன்பு தெய்வம், மூன்று முடிச்சு, அவள் என்ன செய்வாள், உனக்குள் ஒன்று உன்னைத் தேடு, நான் மௌத்தாகப்போகிறேன்” என்பன இவரது பிரபலமான சிறுகதைகளாகும்.
1981ஆம் ஆண்டு இவரது முதல் சிறுகதையான “ஒரு பட்டிக்காட்டுப்பெண் பல்கலைக் கழகம் போகிறாள்” தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது.
மின்மினி என்ற புனைப் பெயரிலும் சமூக மடமைகள், அநீதிகள் பற்றி அவர் தேசிய நாளிதழ்களில் எழுதி வந்துள்ளார்.
அவர் தனது 15வது வயதில் எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்டு சமூகச் சித்திர எழுத்தாளராக சிறுகதைகளை, கவிதைகளை தேசிய நாளிதழ்களில் எழுதியுள்ளார்.
சுமார் 30 இற்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 40 இற்கு மேற்பட்ட கட்டுரைகளையும் ஏராளமான கவிதைகளையும் எழுதியுள்ள இவர் மாணாக்கர் இடர்படும் இடங்கள் என்ற குறிப்பையும் எழுதியிருந்தார் ஆனால் அது அச்சுப் பதிப்புக்கு வரமுன்னதாகவே அவர் காலமாகி விட்டார்.
பிராந்தியத்தில் முன்னர் வெளிவந்த சில கையெழுத்துப் பத்திரிகைகளின் ஆசிரியர் குழாமிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
அன்னாரின் கணவர் ஏற்கெனவே பல வருடங்களுக்கு முன்னர் காலமாகி விட்டார்.
அன்னாருக்கு 4 பெண்களும் இரண்டு ஆண்களுமாக ஆறு சகோதர்கள். இவரின் ஒரு சகோதரர் அவர் வர்த்தக கைத்தொழில் அமைச்சு ஆலோசகர் முஹம்மட் மஹ்ரூப், மற்றையவர் மொழிபெயர்ப்பாளரும் ஆசிரியருமான முஹ்ஸீன் என்போராகும்.
0 Comments:
Post a Comment