(திலக்ஸ் ரெட்ணம்)
மட்டக்களப்பு தமிழர்களின் பூர்வீகக் கிராமங்களான பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கறுவாச்சோலை, புளுக்குனாவ, கெவுளியாமடு, கச்சக்கொடி சுவாமிமலை ஆகிய கிராமங்கள் தமிழ்களிடமிருந்து மெதுமெதுவாக கைநழுவி செல்கின்றது என்பது அனைவரும் அறிந்த விடயம். இந்தக்கிராமங்கள் மட்டக்களப்பு – அம்பாறை எல்லைக்கிராமங்களாக
இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மைய காலங்களில் தமிழர் காணிகள் அபகரிப்புக்குள்ளாகி அடாத்தாக புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு சிங்கள மயமாக்கப்பட்டு வருவது அறிந்த விடயம். அந்த செயலுக்கு இந்த கிராமங்களும் விதிவிலக்கல்ல.
இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மைய காலங்களில் தமிழர் காணிகள் அபகரிப்புக்குள்ளாகி அடாத்தாக புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு சிங்கள மயமாக்கப்பட்டு வருவது அறிந்த விடயம். அந்த செயலுக்கு இந்த கிராமங்களும் விதிவிலக்கல்ல.
அண்மையில் மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) சகிதம் கறுவாச்சோலை கிராமத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த போது அங்கே சென்ற அனைவரின் மனங்களிலும் தங்களை அறியாமலே ஒரு பரிதாபம் காத்திருந்தது. அதுதான் விநாயகலிங்கம் ராணிமலர் தம்பதிகளின் திகில் நிறைந்த வாழ்க்கை. அந்த அடர்ந்த காட்டினுள் வயல்வெளிகள் அருகே அமைந்த பகுதியில் தனியான ஒரு குடும்பம் வாழ்ந்து வருகின்றதென்றால் அந்த ராணிமலரின் குடும்பம்தான். அவர்கள் அங்கே தங்களின் சொந்த நிலத்தினை விட்டு செல்ல முடியாமல் அங்கே பல இன்னல்களுக்கு சவாலாக முகங்கொடுத்து வாழ்ந்து வருவது மட்டுமல்லாமல் அனைத்து அடிப்படை வசதிகளையும் இழந்து தமிழினத்தின் அடையாளமாக அங்கே இருக்கின்றார்கள் என்றால் உண்மையில் அவர்களை நாங்கள் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அருகே உள்ள கிராமமான தமிழர்களின் பூர்வீக கிராமமான கெவுளியாமடு போன்று கறுவாச்சோலைக்கும் வந்துவிடக்கூடாது என்கின்ற எண்ணமும் அவர்களின் அடிமனதில் உள்ளதை உணர முடிந்தது.
கெவுளியாமடு விகாரை |
1983ம் ஆண்டு 105 குடும்பங்கள் வாழ்ந்த இந்தக்கிராமத்தில் தற்போது ஒரேஒரு குடும்பம் வாழ்ந்து வருகின்றது. அருகில் உள்ள கெவுளியாமடு கிராமத்தில் 345 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டள்ளனர். அங்கே இரண்டு விகாரைகள் அமைக்கப்ட்டுள்ளன. புளுக்குனாவையில் ரஜமஹா விகாரையும் அமைக்கப்பட்டு அதனருகே சில வரலாற்றுச் சுவடுகள் பாதுகாக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல் அந்த இடங்களுக்கு சிங்கள மக்கள் இலகுவாக வந்து பார்வையிட்டு செல்வதற்கான பாதைகள் காப்பெற் வீதிகளாக செப்பனிடப்பட்டு அவர்களுக்கான வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள். அதே போன்று கச்சக்கொடி சுவாமி மலையில் 65 குடும்பங்கள் வாழ்கின்றன. இந்தக் கிராமங்கள் அனைத்தும் முற்றாக அடிப்படை வசதிகள் இன்றி காட்டுயானைகள் மற்றும் இயற்கையின் சீற்றம் என்பவற்றுக்கு முகங்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர்.
வரலாற்றுச் சுவடுகள் |
அங்குள்ள மக்களுடன் சில நிமிடங்கள் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. 'இந்தக் கிராமத்தில் நாங்கள் பல வருஷங்களாக இருக்கம். ஆனையும் எங்கட வீடுகள தரைமட்டமாக்கி போட்டு, இங்க இருந்த பல குடும்பங்கள் வெளி இடங்களக்க போய்ட்டாங்க. நாங்களும் இந்த அரசாங்கத்த நம்பி வாழ்ந்து பிரியோசனம் இல்ல. யாருமே எங்கள பாக்கிறாங்கல்ல. வீடு கேட்டு போன என்னத்துக்கு வீடு என்றும் மனச புண்படுத்துற மாதிரியான ஏன் பிள்கைகளை பெத்தெடுக்கீங்க அளவோட இருக்கனும் என்கின்ற மாதிரியான கதைகள கதைச்சு எங்களையெல்லாம் ஏனோதானோ என்ற மாதிரி நடாத்துறாங்க. நாங்களும் கொஞ்ச காலம் இருந்திட்டு மற்ற ஆக்கள போல மெயின்ல வாழலாம் என்டுதான் யோசிச்சிருக்கம்' என்கின்ற செய்தியினையம் அங்கே கேட்க முடிந்தது.
பிள்ளையார் கோவில் |
அங்கே ஒரு பிள்ளையார் கோவில் கமராவில் சிக்கியது. அக்கோயில் துர்ந்து போன நிலையில் கவனிப்பாரற்று பற்றைகளால் மூடி காணப்படுகின்றது. இதனை புனருத்தானம் செய்வதன் மூலம் தமிழர்களின் அடையாள சின்னமாக திகழும் என்பது திண்ணம். ஆனால் இதனருகே ஒரு விகாரை உள்ளதும் குறிப்பிடப்படவேண்டியது. மெதுமெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது சிங்கள குடியேற்றம். தமிழர் காணிகள் அபகரிப்புக்குள்ளாகி சிங்கள மக்களின் பூர்வீக தேசமாக மாற்றப்படுகின்றமையை கண்டும்காணாமலும் அரசியற் தலைவர்கள் இருக்கின்றமையானது நாமும் துணைபோவதைப் எண்ணப்பாட்டினை மக்களிடையே தோற்றுவிக்கின்றது.
பிள்ளையார் கோவில் |
கறுவாச்சோலையில் வாழ்ந்துவரும் ரஞ்சிதமலர் கருத்துத் தெரிவிக்கையில் 'நான் சின்ன வயசில இருந்து இங்குதான் வாழ்ந்து வருகின்றேன். 1983ம் ஆண்டு இஞ்ச 105 குடும்பமும் பிறகு 2007 இடம்பெயர்ந்து திருப்பி குடியேறும் போது 15 குடும்பமும் ரெண்டு வருஷத்துக்கு மேலாக என்ட குடும்பம் மட்டும் தான் இங்க இருக்கம். தண்ணி இல்ல. திவுளான குளத்தில இருந்து வாற வாய்க்கால்ல பூவல் தோண்டித்தான் தண்ணி குடிக்கம். கறண்டும் இல்ல. சமான் வாங்குற என்டாலும் மெயினுக்குத்தான் போகனும். இந்த பிள்ளையையும் கூட நான் இங்க இருக்கிற சிங்களப் பள்ளியில தான் சேத்திருக்கன். இந்த நிலத்தில செய்யிற விவசாயத்த வச்சுத்தான் நாங்க வாழ்றம்.' என்கின்ற தனது வறுமை நிறைந்த வாழ்க்கையினை சோகம் நிறைந்த முகங்களால் தெரிவித்தார்.
தரைமட்டமாக்கப்பட்ட வீடு |
காட்டுயானைகளின் அட்டகாசம் நிறைந்த இந்த கறுவாச்சோலையினுள் பல தடவைகள் காட்டு யானைகளால் தனது வீடு சேதமடைந்து தற்போது அவ்வீடு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உண்மைதான், நேரில் சென்று அந்த நிலைமைகளினை எங்களது கண்களினூடாக பார்வையிட்டிருந்தோம். அவர்களுக்காக அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட ஒருலட்சம் ரூபாய்கள் பெறுமதியான வீடு தற்போது யானைகளினால் அடித்து நொறுக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கல் வீடு என்பது காட்டுயானைகள் இருக்கும் வரைக்கும் எட்டாக்கனிதான்.
'எங்கட வீட்டை பல தடவைகள் உடைச்சிருக்கு ஆனா எங்கள கடவுளே என்டு ஒண்டும் செய்யல. கடைசியாகத்தான் வீட்டை தரைமட்டமாக்கும் போது இரவுல வீட்டை பின்னால உடைக்க நாங்க எழும்பித்து ஓடின. அப்பவும் எங்களுக்கு ஒண்டும் செய்யல. ஒரு தடவ ஆறு யானைகள் ஒன்டாக வந்திச்சு வந்து அதுகளின்ட பாட்டில போச்சுது இதல. இரவுல வரும் என்டா நாங்க தீப்பந்தத்த கொழுத்தி சுத்தினம் என்டா அதின்ட சத்தத்துல பயந்து ஓடிரும். ஒருநாள் ஒரு யானை காலில காயத்தோட முடியாமல் விழுந்து கிடந்து எங்கள தும்பிக்கையால கத்தி கத்தி கூப்பிட்டிச்சு நாங்க பயத்துல போகல. அது எழும்பி கெந்தி கெந்தி நடந்து போய் ரெண்டு நாளில செத்து போச்சுது.' என்று காட்டுயானைகளின் அட்காசத்தினை அச்சமின்றி கூறிமுடித்தார் ராணிமலர்.
ராணிமலரின் மகள் விஜிதினி தற்போது பாலர் பாடசாலை செல்லும் குழந்தை. இவரின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் சிங்கள மொழியில் தன்னுடைய கல்வி நடவடிக்கைகளினை மேற்கொண்டு வருகின்றார். காரணம் இந்த கறுவாச்சோலை பகுதியில் இவர்களுக்கெண்டு தமிழ் பாடசாலை இல்லை என்பதால் கெவுளியாமடுவில் உள்ள சிங்கள மொழி பாடசாலைக்கு காட்டுவழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குழந்தையும் யானையின் குறும்புத்தனங்களை பார்த்து இரசிக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டவர். யானை உணவு உண்ணும் விதத்தினை மலைக்குன்றில் இருந்து ஒவ்வொருநாளும் ரசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் விஜிதினி. இவரின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ராணிமலரின் கணவர் |
நமது தமிழ் அரசியற் தலைமைகள் கெவுளியாமடு ஏனைய பிரதேசங்களின் குடியேற்றம் சம்பந்தமாக பல இடங்களிலும், பல அரசியல் மேடைகளிலும் இதுபற்றி கதைப்பதனை நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால் எந்தவொரு அரசியல் வாதியும் இதற்கான தீர்க்கமான முடிவினை எடுத்து செயற்பட்டதாக தெரியவில்லை. காலங்காலமாக தமிழர் வாழ்ந்த பூமி இன்று மாற்றினத்தின் பூர்வீக நிலமாக மாற்றப்பட்டு கொண்டிருக்கின்றது. இதற்கான இந்;த பிரதேசத்தில் பல சான்றுகள் உள்ளன. கச்சக்கொடிசுவாமிமலையில் உள்ள ரஜமஹா விகாரையும். அதனை அண்யுள்ள வராற்றுச்சுவடுகளுமாகும். கறுவாச்சோலையில் சகோதர இனத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழரின் காணிகளை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றார். இன்று ஒருவர் நாளை பலர் என்ற வகையில் குத்தகை நாளை சொந்தமாக்கப்பட்டு சகோதர இனத்தின் சொந்தக் காணியாக்கப்படும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை.
அந்த பிரதேசங்களில் வாழ்ந்து வெளியேறி தற்போது களுதாவளை, தேற்றாத்தீவுகளில் வாழும் மக்கள்தான் என்ன செய்வார்கள். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் யார்தான் அந்த பூமியில் வசிப்பார்கள். சகோதர இனங்களினை அவர்களின் அரசியற் தலைமைகள் குடியேற்றுகின்றன. அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்த பின்னர்தான் அங்கே குடியேற்றி அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு பல குடியேற்றங்கள் உதாரணமாக கொள்ளலாம்.
இவ்வாறான எல்லைப்புற கிராமங்களில் வாழ்வதென்றால் அவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் மற்றும் நீர்வழங்கல், என்பவற்றுடன் மின்சார வசதி, அவர்களின் பிள்ளைகளுக்கான கல்வி வசதி, போக்கவரத்து வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான குடியேற்றங்களை நாம் ஏற்படுத்துவதுடன் காணி அபகரிப்புக்களுக்கும் முற்றுப்புள்ளியினை வைக்கலாம்.
0 Comments:
Post a Comment