5 Sept 2016

அம்பாறை கல்முனை மாநகர சபை ஆணையாளரை தாக்க முற்பட்ட நபரை உடனடியாகக் கைதுசெய்யுமாறு கோரி, இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

SHARE
அம்பாறை கல்முனை மாநகர சபை ஆணையாளரை தாக்க முற்பட்ட நபரை
உடனடியாகக் கைதுசெய்யுமாறு கோரி, இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை மாநகர சபை ஊழியர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபை ஆணையாளராகக் கடமை புரியும் ஜே. லியாகத்தலியை சாய்ந்தமருது கடை உரிமையாளர் ஒருவர் தாக்க முற்பட்டதுடன், அரச வாகனத்திற்கு சேதம் ஏற்படுத்த முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்தும், அவரை கைது செய்யக் கோரியும் மாநகர சபை ஊழியர்கள், மாநகர சபையில் இருந்து கல்முனை பொலிஸ் நிலையம் வரை பேரணியாக சென்று, பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒரு மணித்தியாலம் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. டபிள்யூ அப்துல் கப்பார், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஆணையாளரை அச்சுறுத்தியவரை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆணையாளரை அச்சுறுத்தியவர் தலைமறைவாகி இருப்பதாகவும் இன்று மாலை 4.00 மணிக்குள் அவரைக் கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆணையாளரை தாக்க முற்பட்ட நபரை கல்முனை பொலிஸார் உடனடியாக கைதுசெய்து தண்டனை வழங்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கல்முனை மாநகரசபை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய், உயரதிகாரிகளை அச்சுறுத்துவதற்கு நல்லாட்சி துணை போகின்றதா? நேற்று ஆணையாளர், இன்று ஊழியர் நாளை பொலிஸாரா? என்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அத்துடன், பதாதைகளை தாங்கியவாறு கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியூடாக, கல்முனை பஸ் நிலைய சந்தி, தமிழ் பிரதேச செயலகம், இலங்கை வங்கி ஊடாக கல்முனை மாநகரத்தினை சென்றடைந்து, அங்கு பொலிஸார் வழங்கிய வாக்குறுதி நிறைவேறும் வரை, அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்முனை மாநகர சபையின் அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால், மாநகர சபையின் அனைத்து பணிகளும் ஸ்தம்பிதமடைந்ததுள்ளதுடன், மாநகர சபைக்குட்பட்ட எந்தவொரு பிரதேசத்திலும் குப்பை அகற்றும் சேவையும் இடம்பெறவில்லை.
அத்துடன் கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை வளாகத்தில் அமைந்திருப்பதால் அதன் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
SHARE

Author: verified_user

0 Comments: