( டிலா )
தமிழ், முஸ்லிம் இரு சமூகங்களும் ஒன்றுபட்டு கல்முனை மண்ணை அபிவிருத்தி செய்ய வேண்டும் என விளையாட்டுத் துறை பிரதி அமைச்சரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
"அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குதல்" எனும் நோக்கத்தை அடைந்து கொள்வதன் பொருட்டு கல்முனை பாண்டிருப்பு பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள அம்பாறை - கல்முனை பிரதான நீர் குழாய் மற்றும் கல்முனை நீர் உந்தும் நிலையத்தை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில்(13) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் எஸ்.ஏ.றஸீட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில்;
தமிழ், முஸ்லிம் சமூகம் ஒரு வரலாற்று முடிவினை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். இந்த பாண்டிருப்பு மண்ணில் இவ்வாறு இரு சமூகத்தவர்களும் தமது கருத்துக்களை பேசுகின்ற சூழ்நிலை அன்று இருக்கவில்லை. தமிழ் சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்துகின்ற சில முஸ்லிம் அரசியல் தலைவர்களை பார்த்து நான் கவலையடைகிறேன். இரட்டை வேசம் போட்டு பேசும் கட்சி முஸ்லிம் காங்கிறஸ் கட்சி அல்ல.
முஸ்லிம், தமிழ், மலையக தமிழர்களின் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு வேட்டு வைக்க பாராளுமன்றத்திற்கு கொண்டுவர இருந்த 20 ஆவது திருத்தச் சட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் முடக்கியது ஒரு வரலாற்று பணியகம். அந்த நம்பிக்கையில் இன்று சிறுபான்மை கட்சிகள் அரசியலமைப்பு, தேர்தல் முறை மாற்றம் தொடர்பான திருத்தத்தை மு.கா தலைவரின் கீழ் தான் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதிக்கு தெரிவித்திருக்கிறார்கள். இன்று அந்த பொறுப்பு மு.கா தலைவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்தியத்தில் TNA, SLMC என்பதை ஒரு புறம் வைத்து விட்டு கடந்த காலங்களில் இழந்த அபிவிருத்திகளை மீண்டும் பெற வேண்டும். பிராந்தியத்தின் அபிவிருத்தி பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டு ஒன்றிணைந்து இந்த மண்ணை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
தொழில் வாய்ப்புக்கள், அரவியல் அதிகாரங்கள் எல்லாவற்றிலும் இந்த மக்கள் திருப்திப்படும் அளவுக்கு வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிறஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர்களான கே.அப்துல் றஸாக், ஏ.எல்.தவம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தின், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், எதிர்கட்சித் தலைவர் ஏ.ஏகாம்பரம், முன்நாள் மாநகர சபை உறுப்பினர்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment