12 Jul 2016

கடந்த அரசால் தொடக்கி வைக்கப்பட்ட ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டம் இன்னமும் நிறைவு செய்யப்படாமல் உள்ளது-யோகேஸ்வரன் MP

SHARE
கடந்த அரசாங்க காலத்தில்; தொடக்கி வைக்கப்பட்ட ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகளில் தொடங்கப்பட்ட வேலைகள் இன்னமும் நிறைவு செய்யப்படாமல் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்ட
மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்;. யோகேஸ்வரன்  தெரிவித்தார்.

ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (ஜுலை 11, 2016) பிற்பகல் இடம்பெற்ற விஞ்ஞான தொழினுட்ப ஆய்வு கூடத்திறப்பு விழாவின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் எஸ்;.தில்லைநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்,
விஞ்ஞானத்துறையை வளர்க்க வேண்டிய அவசியம் தற்போது உணரப்பட்டுள்ளது.

தமிழ் சமூகத்தில் வைத்தியர்கள்,  பொறியியலாளர்கள், சட்ட வல்லுநர்கள் தேவையாக உள்ளனர். எமது சமூகம் தொழினுட்ப மற்றும் விஞ்ஞானத்துறையோடு சம்பந்தப்பட்ட பாடங்களைத் தேர்வு செய்து அந்தத் துறைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்.

கடந்த காலத்திலே உயர்தர வகுப்புக்கு தொழினுட்ப பாடத்தை ஆரம்பிக்க பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டபோது, கிழக்கு மாகாணத்திலே திட்டமிட்ட வகையில் தமிழ்ப் பாடசாலைகள் முற்று முழுதாகப் புறக்கணிக்கப்பட்டன.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் புறக்கணிப்பைத் தீவிரமாக எதிர்த்ததினால் விமோசனம் கிடைத்தது.

ஆனால், இப்பொழுது கிழக்கு மாகாண சபை ஆட்சியிலே பங்காளியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எங்களது சகாவான எஸ். தண்டாயுதபாணி அவர்கள் மாகாண கல்வி அமைச்சராகக் கிடைத்திருக்கின்றார். அதுபோன்று கல்வி இராஜாங்க அமைச்சராக மத்திய அரசிலே தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உள்ளார். இது தமிழ் சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும். இவர்களைக் கொண்டு கடந்த கால மாகாண அரசால் புறக்கணிக்கப்பட்ட தமிழ்ப் பாடசாலைகளை நாம் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து வருகின்றோம்.

தண்டாயுதபாணி அவர்கள் முன்னர் மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளராகவும் இருந்து அனுபவங்களைப் பெற்றவர் என்பதால் அவர் தமிழ் முஸ்லிம், சிங்களவர் என்று பேதம் பார்க்காமல் கல்வியை மேம்படுத்துவதில் கடும் சிரத்தை எடுத்துள்ளார்.
யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் தங்களிடம் தன்னகத்தே கொண்டிருக்கும் வளங்களை அதிக உச்ச அளவில் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.” என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், பாடசாலையின் பிரதி அதிபர் என்;. இராஜதுரை உட்பட வேறு பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: