(இ.சுதா )
சிறுபான்மை மக்களின் பொருளாதார உட்கட்டமைப்பு விடயங்களில் அரசாங்கத்தின் பங்களிப்பு மிகக் குறைவாகக் காணப்படுகின்றது
கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி எனும் போர்வையில் தமிழ் பேசுகின்ற வடகிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக ஏமாற்றப் படுகின்றனர் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டில் காலத்துக்குக் காலம் ஆட்சி மாற்றங்கள் நடைபெறுகின்ற போது ஆட்சியினை பொறுப் பேற்றுக் கொள்கின்ற அரசாங்கமானது சிறுபான்மை மக்கள் தொடர்பான தீர்வு விடயங்களில் கரிசனை கொள்ளாது தாம் சார்ந்த சமூகக் கட்டமைப்பினை முன்னேற்றுவதில் குறிக்கோளாக செயற்படுகின்றமை கவலை தரக்கூடிய விடயமாகும். இந்நிலைமை மாற்றம் பெறவேண்டும்.
மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தில் செவ்வாய்க் கிழமை (12) காலை நடைபெற்ற ஆய்வுகூடத்திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இதன்போது குறிப்பிடுகையில்…..
மத்திய அரசாங்கத்தினால் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்ற நிலையில் விகிதாசார அடிப்படையில் அதிகளவான சகோத மொழி பேசுகின்ற சிங்கள இனத்தினைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் தமிழ் மொழி பேசுகின்ற சிறுபான்மை இனத்தவர்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச திணைக்களங்களில் நிரந்தர நியமனங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். இவ்வாறான நிலை அண்மைக் காலங்களாக நடைபெற்று வருகின்றன.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட தாதியர் பயிற்சி வைத்தியசாலைக்கு சுமார் ஐம்பது சிற்றூழியர் நியமனங்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன. இதில் சகோதர மொழி பேசுகின்ற இளைஞர் யுவதிகளே உள்ளடக்கப் பட்டுள்ளனர். இதனால் நோயாளிக்கும் உத்தியோகத்தர்களுக்கிடையிலான மொழி ரீதியான பிரச்சினைகள் மாத்திரமல்லாது தமிழ் மொழி பேசுகின்ற சிறுபான்மை இனத்தவர்களுக்கு தமது சொந்த பிரதேசங்களில் தொழில் வாய்ப்புக்களை பெறமுடியாத துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெறுமனே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்கள் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் பேச்சளவில் மாத்திரமே அறிக்கையினை விடுத்து திரைக்கு மறைவில் பாத்திரமேற்று நடிக்கின்றனர். தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றினை சுவாசிப்பதாக கூறிக் கொண்டு சுதந்திரத்தினை முழுமையாக அனுபவிப்பவர்கள் சகோதர மொழி பேசுகின்ற சிங்கள மக்களே? நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் கொள்கைகளை சிறுபான்மை மக்கள் எதிர்க்காத வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டும். அப்போதுதான் நாட்டில் தன்னிறைவு ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment