14 Jul 2016

மைத்திரியை ”பீப்” வார்த்தைகளால் திட்டித்தீர்த்த பௌத்த பிக்குவிற்கு கண்டனம்-(வீடியோ)

SHARE
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியால் அனுசரணை வழங்கப்பட்டு போஷிக்கப்பட்ட பௌத்த பிக்குகள் தலைமையிலான இனவாத மற்றும் அடிப்படைவாத குழுக்களுக்கு சுதந்திரமாக செயற்பட நல்லாட்சி அரசாங்கம் அனுமதி
அளித்து வருவதாக கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொள்ளாததாக கூறி, மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் தலைமை பௌத்த பிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகையை அடித்து நொறுக்கியதுடன், மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் ஜனாதிபதியை திட்டித் தீர்த்திருந்தார்.
மங்களாராமய தலைமை பௌத்த பிக்குவான அம்பிட்டியே சுமனரத்தன தேரரின் இந்த செயல்கள் தொடர்பில் கடும் ஆத்திரம் வெளியிட்ட ஊழலுக்கு எதிரான தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா,
பௌத்த பிக்குகள் இவ்வாறு ரவுடிகளைப் போல் நடந்துகொள்வதற்கு மஹிந்த ராஜபக்சவும், அவரது சகாக்களுமே காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.
மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்காக உழைத்த பொது அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஊழலுக்கு எதிரான தேசிய முன்னணி கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அதன் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா, இந்த இனவாதக் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி நடந்துகொண்ட விதம், மிகவும் மோசமானது என்றும் பௌத்த பிக்குகளே இவ்வாறு நடந்துகொள்வார்களானால் சாதாரண மக்கள் எவ்வாறு செயற்படுவர் என்பதை கூறத்தான் வேண்டுமா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான காவி உடை தரித்த கும்பல்களை தூண்டிவிட்டு அவர்களுக்கு வழங்கி வந்த அரச அனுசரணை காரணமாகவே இன்றும் அவர்கள் இவ்வாறு மோசமாக நடந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
அதேபோல் மஹிந்த ராஜபக்சவும் அவரது ஆட்சியில் இருந்தவர்களுமே கடும் போக்குவாதத்தையும், இனவாதத்தையும் நாட்டில் தூண்டிவிட்டதாகவும் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இராவாண பல காயவிற்கு வாகனம் கொடுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

SHARE

Author: verified_user

0 Comments: