மட்டக்களப்பு, ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் ஏறாவூர் நகரத்தில் சேரும் அனைத்து வகையான சாக்கடைக் கழிவுகளும் கொட்டப்படுவதால் சுற்றாடலுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.
மட்டக்களப்பு வாவி முடிவடையும் ஏறாவூர் வாவிக் கரையோரத்தின் ஒரு பகுதியிலேயே ஏறாவூர் நகரசபையினால் நகருக்குள் இருந்து அகற்றப்படும் சகலவிதமான சாக்கடைக் கழிவுகளும் கொண்டப்பட்டு வருகின்றன.
கடந்த பல வருடங்களாக சுற்றாடலுக்கும் சூழலுக்கும் நாசம் விளைவிக்கக் கூடிய வகையில் இடம்பெற்றுவரும் இந்த செயற்பாட்டை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
இந்த குப்பை மேட்டிற்கு அருகில், பாடசாலை, கலாச்சார மண்டபம், சமூக சேவைத் திணைக்களக் காரியாலயம், விளையாட்டு மைதானம், களப்பு மீன் விற்பனைச் சந்தை, சிறுவர் பூங்கா, ஓய்வுத் திடல் பள்ளிவாசல், பிரதேச செயலகம், மக்கள் குடியிருப்புக்கள் என்பன அமைந்துள்ளன.
இத்தகைய அமைவிட முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாவிக்கரையில் மாமிச மற்றும் அனைத்து வகையான சாக்கடைக் கழிவுகளும் நாளாந்தம் கொட்டப்படுவதால் சுகாதாரப் பிரச்சினைகளை முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக பாதிக்கப்படுவோர் தெரிவிக்கின்றனர்.
துர்நாற்றம் சகிக்க முடியாமல் இருப்பதால் மேற்குறிப்பிட்ட அனைத்து அலுவலங்களில் கடமைபுரிவோரும், மாணவர்களும், சிறுவர்களும், விளையாட்டில் ஈடுபடுவோரும், தமது ஓய்வைக் கழிக்க வாவிக் கரைக்கு வருவோரும் என எல்லாத் தரப்பினரும் அசௌகரியத்திற்குள்ளாகின்றார்கள்.
மேலும், அங்கு தினமும் கொட்டப்படும் மாமிசக் கழிவுளை தூக்கிச் செல்லும் பறவைகளும் விலங்குகளும் அவற்றை அயலிலுள்ள கிணறுகளிலும் வீட்டு வளவுகளிலும் போட்டு விடுவதால் பெரும் அசெகரியம் உண்டாவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது ஒரு புறமிருக்க, வாவிக்கரையோரத்தில் கொட்டப்படும் மாடு, ஆடு, கோழி என்பனற்றின் மாமிச எச்சங்களை உண்பதற்கு ஏராளமான முதலைகளும் வருவதால் தமது பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியுள்ள மீன்பிடி வலைகள் வாவி முதலைகளால் சேதப்படுத்தப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, ஒட்டு மொத்தமாக சூழலுக்கும் மனிதர்களுக்கும் காலாகாலமாக கேடு விளைவித்துவரும் வரும் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கண்டாக வேண்டும் என பொதுமக்கள் வேண்டி நிற்கின்றனர்.
ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் மலைபோல் குவிந்துள்ள சாக்கடைக் கழிவுகள் ஏறாவூருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமான சூழலுக்குமே ஆபத்தானதென்று சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏறாவூர் நகரம் எதிர்கொள்ளும் தி;ண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் குறித்து ஆராயும் அவசர கூட்டம் ஒன்று ஓகஸ்ட் 03ஆம் திகதி ஏறாவூர் நகரசபையில் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாணத்தின் உள்ளுராட்சி நிருவாகத்துக்குப் பொறுப்பான அமைச்சரும் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment