6 Jun 2016

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கோரி பாடசாலை நுழைவாயிலை மூடி பெற்றோர் ஆர்ப்பாட்டம.

SHARE
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் நிலவும் அதிகப்படியான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கோரியும் பாடசாலை நிருவாகத்தின் சீரின்மையைக் கண்டித்தும் திங்கட்கிழமை 06.06.2016 ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர் பாதுகாவலர் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம், ஊர்ப் பொது அமைப்புக்கள் ஆகியவை இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்டப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

ஆர்ப்பாட்டக்காரர்களால் பாடசாலை நுழைவாயில் பூட்டப்பட்டிருந்தது.
117 ஆசிரியர்கள் தேவையான இந்தப்   பாடசாலையில் தற்போது 56 ஆசிரியர்களே கடமையிலுள்ளார்கள். அதிலும் மேலும் 6 ஆசிரியர்களுக்கு இடமாற்றக் கடிதம் கிடைத்துள்ளது.

இந்த ஆசிரியர் பற்றாக்குறைக்கு மாகாணக் கல்வி அமைச்சர் உரிய பதிலளிக்க வேண்டும், வலயக் கல்விப் பணிப்பாளரே மாணவர்களின் கல்வியைச் சீரழிக்காதே, கல்வி மறுப்பு இன அழிப்புக்குச் சமனானது, மஹிந்தோதய திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட தொழினுட்ப ஆய்வு கூடம் இன்னமும் மாணவர்களின் பாவினைக்குத் திறந்து விடப்படவில்லை, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள், ஊர்ப் பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்பவற்றுக்குத் தெரியாமல் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டங்களை நடாத்துவது, வெளிப்படைத் தன்மையற்ற கணக்கறிக்கை சமர்ப்பிப்பு மற்றும் ஆளுமையற்ற தலைமைத்துவம் என்பன காரணமாக பாடசாலையில் தற்போது கடமையாற்றும் அதிபரையும் இடம்மாற்றுமாறு ஆர்ப்பாட்டக் காரர்கள் வலியுறுத்தி நின்றனர்.

ஆர்ப்பாட்ட இடத்தில் வன்முறைகள் நிகழா வண்ணம் ஏறாவூர் பொலிஸார் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பாடசாலைக்கு வருகை தந்த கிழக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரெட்ணம், கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் ஆர்ப்பாட்டக் காரர்களுடன் கலந்துரையாடி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு தாம் உரிய தரப்பினருடன் கலந்தாலோசித்து முயற்சிப்பதாக வாக்குறுதியளித்தனர். எனினும் உடனடியாக ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்திக்கப்பட வேண்டும் என்றும் இல்லையேல் தொடர் போராட்டங்கள் இடம்பெறும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.















SHARE

Author: verified_user

0 Comments: