அரசியலுக்கு முழுமையாக முழுக்குப் போடுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அதிரடி அறிவிப்பு அரசியலுக்கு முழுமையாக முழுக்குப் போட்டு விட்டு பிரதிநிதித்துவ
அரசியல் முறையில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் திங்கட்கிழமை (ஜுன் 20, 2016) அதிரடி அறிவிப்புச் செய்துள்ளார்.
இது விடயமாக அவர் திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1981 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கிய தனது அரசியல் வாழ்க்கையை இன்றோடு நிறைவு செய்து கொண்டுள்ளதாகவும் இனி வரும் காலங்களில் நடைபெறப்போகின்ற நாடாளுமன்ற, மற்றும் மாகாண சபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
பிரதிநிதித்துவ அரசியல் முறையில் இருந்து இன்று முதல் முழுமையாக விலகிக்கொள்வதாகத் தெரிவித்துள்ள பஷீர் சேகுதாவூத் தான் இனி எந்தவொரு கட்சியிலும் தேசிய பட்டியலின் மூலமோ அல்லது எதிர்காலத்தில் தேர்தல் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களால் அல்லது வேறு ஏதேனும் முறையில் நாடாளுமன்றத்திற்கோ அல்லது மாகாண சபைக்கோ மக்கள் பிரதிநிதியாக செல்லப்போவதில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சமகால அரசியல் சூழலில் முஸ்லிம் தேசிய அடையாள அரசியல் பெரும் நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்துள்ளது.
இந்தப் பின்புலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இருப்பும், அதன் தலைமைகளின் நம்பகத்தன்மையும் கட்சியின் உயிர்ப்பும், தூய்மையும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.
இன்றைய முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் சமூக ஈடேற்றம் பற்றி சிந்திக்காது, பதவிகளையும், சலுகைகளையும் குறிவைத்தே அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்ற விமர்சனம் சமூகத்தினால் முன்வைக்கப்படுகிறது.
அதுமாத்திரமன்றி எந்தவொரு அரசியல் கட்சியிலும் எவரும் நேர்கோட்டை வரைய முற்படுகின்ற போதெல்லாம், பதவிகளை நாடிய மூன்றாம்தர நடவடிக்கைகளாக அவை சோடித்துக் காட்டப்பட்டு நேரிய மாற்றங்களுக்கான முயற்சிகள் தோற்கடிக்கப்படுகின்றன.
இதனால் புறவிமர்சனங்களை சுயவிமர்சனங்களாக மாற்றிக் கொண்டு சோடனைக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டு தனிப்பட்ட அரசியல் நம்பகத்தன்மையை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பிரதிநித்துவ அரசியலில் இனியொருபோதும் ஈடுபடுவதில்லை என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்.
அதேவேளை, சமகால முஸ்லிம் அரசியலில் பதவிகளைப் பெறும் இலக்குகளற்ற ஒரு பாத்திரத்தின் மூலம் செயலாற்ற முடிவெடுத்துள்ளேன்.
பிரதிநித்துவ அரசியல்வாதியாக அன்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு கடை நிலை உறுப்பினராகவேனும் இருந்து கட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் தீவிரமான அரசியல் செயல்பாட்டாளராக எனது எஞ்சிய வாழ் நெடுகிலும் இருக்கப் போகிறது.
அரசியலில் எனது ஆசிரியராக திகழ்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் மூன்று தடவைகள் தேசிய பட்டியல் மூலம் எனக்கு நாடாளுமன்றம் செல்ல வாய்ப்பளித்த கட்சியின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம், ஈரோஸ் இயக்க நிறுவுனர் மறைந்த இரத்தினசபாபதி, எனது அரசியல் ஆசானும் உற்ற தோழனுமாகிய பாலகுமார் மற்றும் நான் போட்டியிட்ட 7 தேர்தல்களிலும் வாக்களித்த மக்களுக்கும் தான் நன்றி தெரிவிப்பதாக பஷீர் சேகுதாவூத் தனது அறிக்கையில்; தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நடப்பு நாடாளுமன்றத்திற்காக பஷீர் சேகுதாவூத் மட்டக்களப்பு மாவட்டத்தின் அவரது சொந்த ஊரான ஏறாவூரில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட பொழுது தான் மக்களால் தெரிவு செய்யப்படாது போனாலும் வானத்தில் இருந்து குதித்தாவது நாடாளுமன்றம் செல்வேன் என சபதமிட்டிருந்தார்.
எனினும், கடைசி வரை அவருக்கு இம்முறை தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்க கட்சித் தலைமை முன் வரவில்லை என்ற அதிருப்தி பஷீர் சேகுதாவூத்துக்கு உண்டு என்றும் அதன் வெளிப்பாடே இந்த அறிக்கை என்றும் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
0 Comments:
Post a Comment