1 Jun 2016

ஊடகவியலாளர் நடேசனின் படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்கக்கோரிகவனயீர்ப்பு போராட்டம்

SHARE
(பழுவூரான்)

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 12வது நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றிலில் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை காலை நடாத்தினர்.
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்ககோரியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், ச.வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், மா.நடராசா, இந்திரகுமார் பிரசன்னா, கோவிந்தன் கருணாகரம், ஞா.கிருஷ்ணபிள்ளை, ஷிப்லி பாறூக் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். 

இதன்போது அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ ஊடகத்துறை அமைச்சர், கௌரவ பொலிஸ்மா அதிபர் அவர்களுக்கான மகஜர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது. 

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,
இலங்கையில் இன்று வரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 சிங்கள ஊடகவியலாளர்களும் 03 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சிக்காலத்தில் 01 ஊடகவியலாளரும் ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஆட்சிக்காலத்தில் 02 ஊடகவியலாளரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

1985ம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் 2010ம் ஆண்டுவரை தொடர்ந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்றுவந்த கடந்தகால ஆட்சியை ஊடகத்துறையின் பெரும்பங்குடன் முடிவுக்கு கொண்டுவந்த நல்லாட்சி அரசாங்கம், இன்று இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலை குறித்த விசாரணைகளையே ஆரம்பித்துள்ளது.
ஆனால் இந்த நாட்டில் பெருந்தொகையாக கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளை இன்றுவரை ஆரம்பிக்கவில்லை.

இந்நிலையில் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளரும் மனிதவுரிமை செயற்பாட்டாளருமான ஐயாத்துரை நடேசன் அவர்களின் 12வது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்துகின்றோம்.

இந்த போராட்டத்தின் ஊடாக நாங்கள் இந்த நாட்டின் நல்லாட்சி அரசுக்கும் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பொலிஸ்மா அதிபருக்கும் ஊடகத்துறை அமைச்சுக்கும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

1.  மிக விரைவாக சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் படுகொலைக்கான விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும்.

2.  இலங்கையில் இன்றுவரை சுட்டுக்கொல்லப்பட்ட காணாமல்போன ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிடவேண்டும்.

3.  நல்லாட்சியிலும் தொடரும் மறைமுகமான ஊடக அடக்குமுறையை தடுத்து நிறுத்தி ஊடகசுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

4.  நடேசனின் படுகொலை விசாரணையை மட்டக்களப்பில் ஆரம்பிக்கவேண்டும்.
மேற்குறித்த எமது கோரிக்கைகளை எற்று மிகவிரைவாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்விடுக்கின்றோம்.

மேற்படி எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் இந்த நாட்டில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலைக்குதள்ளப்படுவோம் என கேட்டுக்கொள்கின்றோம்.














SHARE

Author: verified_user

0 Comments: