31 May 2016

கிழக்கின் இளைஞர் முன்னணியினரினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு கல்வி வலயங்களில் (க.பொ.த) சாதாரண தர மாணவர்களிற்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தினை படியுயர்த்தும் நோக்கில் கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின்(பிரதிப்பணிப்பாளர்,தேசிய மொழிக் கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவகம்) திட்மிடலில் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட படுவான்கரை பிரதேசத்தில் காணப்படும் திக்கோடை,மண்டூர்,தும்பங்கேணி,வெல்லாவெளி,
கணேசபுரம் போன்ற பிரதேச பாடசாலைகளில் (.பொ.)சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களினை ஒன்றிணைத்து மட்-பட்-வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் மாசி மற்றும் சித்திரை மாதங்களில் இரு தொகுதிகளாக இலவசக் கல்விக்கருத்தரங்கு நடாத்தப்பட்டிருந்தது. இக்கருத்தரங்கு கணிதம்,வரலாறு,தமிழ் ஆகிய பாடங்களை உள்ளடக்கியதாக நடைபெற்றிருந்ததுடன் 200 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருந்தனர்.
இலவசக் கல்விக்கருத்தரங்கின் அடுத்த படிநிலையாக மாணவர்களின் வேண்டுகோளிற்கிணங்க மேற்குறிப்பிட்ட 3 பாடங்களுடன் விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களும் இணைக்கப்பட்டு (.பெ.)சா.தரத்தின் முக்கிய 05 பாடங்களிற்குமான இலவச கருத்தரங்கு கடந்த 21.05.2016 அன்று ஆரம்பமாகி வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் கருத்தரங்கு தொடரின் 3ம் தொடர் இடம்பெற்றுவருகின்றது.

அதேபோன்று மட்டக்களப்பு கல்விவலயத்திலுள்ள மாணவர்களின் வேண்டுகோளிற்கிணங்க முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின் மற்றுமொரு திட்டமிடலின் கீழ் மட்-கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கிரான்குளம்,புதுக்குடியிருப்பு,ஆரையம்பதி போன்ற பிரதேசங்களினை சேர்ந்த மாணவர்களிற்கான கருத்தரங்கு மேற்கூறப்பட்ட 05 பாடங்களையும் உள்ளடக்கியவாறு 28.05.2016 அன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இரு கருத்தரங்குகளின் தொடர்ச்சி அடுத்த வார இறுதிநாட்களில் குறித்த கருத்தரங்கு நிலையங்களில் இடம்பெறவிருக்கின்றது. 
மாணவர்களின் மத்தியில் இக்கருத்தரங்குகள் பாரிய வரவேற்பை பெற்றுள்ளதுடன் கற்கும் ஆர்வம் வளரச்சியடையவும் காரணமாக அமைந்திருக்கின்றது.
கருத்தரங்கு சம்பந்தமாக முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவிக்கையில் எமது நோக்கமானது பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்கள் மேலதிக வகுப்புகளிற்கு செல்ல முடியாமல் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளையும் தவறவிடுகின்றனர். எனவே எமது தமிழ் சமூகத்தினை hரமுயர்த்துவதற்கு நாம் கல்வியில் உயர வேண்டும். இதற்கான முயற்சியிலேயே நானும் எனது முன்னணியின் உறுப்பினர்களும் செயற்பட்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள எமது உறுப்பினர்களின் மூலம் அப் பிரதேசங்களிலும் இலவச கருத்தரங்குகளை எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கவிருக்கின்றோம்.
இம்மாதம் மகிழூர்,எருவில்,குருமண்வெளி,களுவாஞ்சிகுடி,ஓந்தாச்சிமடம்,கோட்டைக்கல்லாறு,பெரியகல்லாறு போன்ற பிரதேசங்களை ஒன்றிணைத்து மேலும் ஒரு தொகுதி கருத்தரங்கினையும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். எமது பணி கல்வியினோடு மட்டும் நின்றுவிடாமல் சுகாதார, சிரமதானப் பணிகள் போன்ற பல துறைகளிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் அனைத்து இளைஞர்களையும் எம்முடன் கரம் கோர்க்க அழைக்கின்றோம் என தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: