மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச சபைக்குட்பட்ட கொத்தியாபுலை, குருந்தையடி முன்மாரி, காஞ்சிரங்குடா ஆகிய பகுதிகளில் செறிந்து வாழும் தமிழ் மக்கள் குடிநீரின்றி மிகவும், மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான எவ்விதமான
உதவிகளும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
குடிநீர் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு தீர்வினை பெற்றுத்தரும்படி அந்த மக்கள் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
ஞாயிறன்று (08) குறிப்பிட்ட கிராமங்களுக்குச் சென்ற ஷிப்லி பாறூக் மக்களுடன் கலந்துரையாடி அவர்கள் குடிநீரின்றி கஷ்டப்படும் மோசமான கஷ்ட நிலையை நேரில் கண்டறிந்ததோடு வவுணதீவு பிரதேச சபை செயலாளரை உரிய இடத்திற்கு அழைப்பித்து இந்நிலைமையை நேரடியாக அவருக்கு விளங்கப்படுத்தியதுடன் இம்மக்களுக்கு உடனடியாக குடிநீரை வாகனங்களினூடாக வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.
மேலும், இம்மக்களுக்கு அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகாமையில் குடிநீர்த் தாங்கிகளை அமைத்து குடிநீர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடமும் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து இவ்விடயம் செவ்வாய்க்கிழமைக்குள் 10.05.2016 வவுணதீவு மக்களின் குடிநீர்ப்பிரச்சினை தீர்க்கப்படும் என வவுணதீவு பிரதேச செயலாளரால் மாகாண சபை உறுப்பினருக்கு தொலைபேசியியூடாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒரு குடம் நீருக்காக அதிகாலை மூன்று மணிக்கு காட்டு வழிப்பாதைகளினூடாக பல 100 மீற்றர்கள் போதிய வெளிச்சமற்ற வழிப்பாதைகளினூடாக நடந்து சென்றும் சில வேளைகளில் விஷ ஜந்துக்களின் தீண்டுதலுக்கும் உள்ளாகி குடிப்பதற்கு நீர் சுமந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கிடம் கண்ணீரோடு குறிப்பிட்டனர்.
பாடசாலைக்கு செல்லும் தங்கள் பிள்ளைகள் தண்ணீர் இல்லாத காரணத்தினால் உரிய நேரத்திற்கு பாடசாலை செல்ல முடியாத நிலைமை தோன்றியுள்ளதாகவும் அம்மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
இங்கு காணப்படும் குடிநீர்ப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்கும் பொருட்டு நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வளங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் நிரந்தர நீர் இணைப்பினை இப்பகுதி மக்களுக்கு வழங்குதல் தொடர்பாக நடை பெறும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மாகாண சபை உறுப்பினரால் கோரிக்கையொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது .
மேலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இப்பகுதி மக்களுக்கான குழாய்க்கிணறு மற்றும் கிணறுகளை அமைத்துக் கொடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதுடன் இக்கிணறுகளை அமைப்பதற்கான இடங்களை மாகாண சபை உறுப்பினரிடம் கிராம மக்கள் அடையாளப்படுத்தினர்.
0 Comments:
Post a Comment