மட்டக்களப்பு உன்னிச்சை நீர் விநியோக குளத்திற்கு அருகே வசித்தும் இதுவரையில் குடிநீர் வசதிகள் இன்றி கஷ்டப்படும் உன்னிச்சைக் குளப் பிரதேசத்தை அண்டியுள்ள மக்களுக்கு அடுத்த ஒரு வருடத்துக்குள் குழாய் நீர் வழங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக செவ்வாய் கிழமை (08) கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, உன்னிச்சை நீர் விநியோகக் குளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் குடிநீரை கிட்டத்தட்ட 50 கிலோ மீற்றருக்கும் அப்பால் உள்ள மட்டக்களப்பு நகர்ப்புற மக்கள் பெற்று நன்மையடைகின்றனர்.
அதேவேளை, உன்னிச்சைக் குளத்தை அண்டியுள்ள உன்னிச்சை, நெடியமடு, ஆயித்தியமலை போன்ற பிரதேச மக்களுக்கு இந்த குழாய் நீர் விநியோகம் கிட்டவில்லை.
இப்பிரதேச மக்களின் பிரதான வேண்டுகோள் குடிநீர் பிரச்சனைக்கான தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே ஆகும்.
இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரம சிங்க. நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே உட்பட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவந்ததை அடுத்து குழாய் நீர் விநியோகம் கிடைக்காத கிராமங்களுக்கும் அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.
உன்னிச்சைப் பிரதேச மக்களின் நீண்ட கால பிரதான பிரச்சினையொன்று தீரப் போவதையிட்டு அதற்காகப் பணியாற்றும் ஊடகங்கள் உட்பட அத்தனை பேருக்கும் மக்கள் சார்பாக நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
0 Comments:
Post a Comment