19 Feb 2016

முதலுதவி அறிவு எல்லோருக்கும் எப்போதும் தேவை – த.வசந்தராஜா

SHARE
முதலுதவி அறிவு அனைவருக்கும் அவசியம். அனர்த்தம் ஏற்படக்கூடிய இடத்தில் வசிப்போருக்கு மட்டுமே முதலுதவி அறிவு அவசியம் என சிலர் கருதுகின்றார்கள். அனர்த்தம் ஏற்படக்கூடிய இடங்களில் வாழும் மக்களுக்கு அடிப்படை முதலுதவி அறிவு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் முதலுதவி அறிவு அனைவருக்கும் அவசியமே. என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர், த.வசந்தராஜா தெரிவித்தார்.
மகிழவெட்டுவான் கிராம சேவகர் பிரிவு அனர்த்த முகாமைத்துவக் குழு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டக்கிளையும் ஒக்ஸ்பாம் நிறுவனமும் இணைந்து நடாத்திய அனர்த்த முகாமைத்துவக் குழுவினர்க்கான அடிப்படை முதலுதவிப் பயிற்சியை மகிழவெட்டுவான் வாசிகசாலை மண்டபத்தில் வியாழக் கிழமை (18) ஆரம்பித்து வைத்துப் பேசுகையிலே அவர், இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

வீட்டிலோ வேலைத் தளத்திலோ ஒருவரை மின்சாரம் தாக்கலாம், விபத்து ஏற்பட்டு காயமுறலாம் அல்லது என்பு முறிவு ஏற்படலாம், காயத்திலிருந்து கடுமையான இரத்தப் பெருக்கு ஏற்படலாம், ஒருவருக்கு மார்படைப்பு ஏற்படலாம், உணவு தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்படலாம், அதிர்ச்சியூட்டும் தகவல்களைக், கேட்டு ஒருவர் உளத்தாக்கம் ஏற்பட்டு மயங்கிப் போகலாம். இத்தருணத்தில் வைத்திய உதவி உடனடியாகத் தேவை. 

ஆனால் வைத்திய உதவி கிடைக்கும் வரையில் இத்தகைய நிலைக்கு ஆளான ஒருவரைக் கையாளும் வழிகள் தெரியாமல் எத்தனையோபேரை நாம் இழந்திருக்கின்றோம். முதலுதவி அறிவு பெற்ற ஒருவருக்குத்தான்; இத்தகைய நிலைக்கு ஆளானோரை முறையாக கையாளத் தெரியும். எனவே அடிப்படை முதலுதவி அறிவு யாவருக்கும் தேவை என அவர் இதன்போது தெரிவித்தார்.

மகிழவெட்டுவான், கற்;குடா, தில்லந்தோட்டம் என 3 கிராமங்கள் உள்ளடங்கியதே மகிழவெட்டுவான் கிராமசேவகர் பிரிவு. இப்பிரிவில் ஏறக்குறைய 550 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமசேவர் பிரிவு வருடாவருடம் பெய்யும் பெருமழையினால்; ஆற்றுப்பெருக்கினாலும் வெள்ளப்பெருக்கினாலும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுவதுண்டு. அவ்வேளைகளில் மக்கள் நோயுறுவது விபத்துக்குட்பட்டு காயமுறுவது என்பு முறிவுக்குள்ளாவது போன்ற பல்வேறு தாக்கங்களுக்கு உட்பட்டு தகுந்த நேரத்தில் வைத்திய உதவி கிடைக்காமல் கஷ்டமுறுவது வழக்கம்.

இத்தகைய நேரங்களில் நோயுறுவோர் விபத்துக்குட்படுவோர் முதலானோரின் உயிரைப் பாதுகாப்பதற்காகவும் நோய் தீவிரமடையாமல் இருப்பதற்காகவும் நோய் விரைவில் குணமடைவதற்காகவும் முதலுவதவி அறிவு படைத்தோர் இக்கிராமத்தில் இருக்க வேண்டியதை உணர்ந்த இப்பகுதி அனர்த்த முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டகிளைத் தலைவர் த.வசந்தராஜாவிடம் முன்வைத்த கோரிக்கைக்கிணங்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையினர், ஒக்ஸ்பாம் நிறுவனத்துடன் இணைந்து இக்கிராம சேவகர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 அனர்த்த முகாமைத்துவக் குழு உறுப்பினர்களுக்கு இருநாள் அடிப்படை முதலுதவிப் பயிற்சியை வழங்கி வைத்தனர். இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் பயிலுனர்களுக்கு முதலுதவிச் சான்றிதழ் வழங்கப் படவுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது,











SHARE

Author: verified_user

0 Comments: