6 Oct 2015

அரசாங்க அதிபரின் மூன்று கோரிக்கைகளுக்கு ஏற்ப ஆர்ப்பாட்டம் பி.ப.5 மணியளவில் நிறைவு

SHARE
திங்கட் கிழமை காலை 8 மணியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் மாலை 5 மணிவரைத் தொடர்ந்தது. இதனால் மண்டூர் - மட்டக்களப்பு பிரதான வீதி திங்கட் கிழமை பகல் முழுவதும் முற்றாகத் தடைப்பட்டிருந்ததோடு போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் முற்றாக இயங்கவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப் படுவதாவது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதச செயலகத்தின் வாயிற் கதவை பூட்டியும், மண்டூர் – மட்டக்களப்பு பிரதான வீதியை வழிமறித்தும், போரதீவுப்பற்று பிரதேச பொதுமக்கள் திங்கட் கிழமை (05) காலையிலிருந்து ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்டனர்.

இப்பிரதேசத்தில் தொடர்ந்து இடம்பெற்று வரும் காட்டு யானைகளின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தொடர் ஆர்ப்பாட்டத்தினால் மண்டூர் - மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாகத் தடப்பட்டிருந்ததோடு, போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் முற்றாக இயங்கவில்லை.

பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், மற்றும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், உள்ளிட்ட குழுவினர், போரதீவுப்பற்று பிரதேச சபைக் காரியாலயத்தில் மக்களின் இப்போராட்டம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் பின்னர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்த இடத்திற்கு வந்த மேற்படி குழுவினர் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

தாம் தொடர்ந்து காட்டுயானைகளினால் தாக்குதல்களை எதிர் கொண்டு வருவதாகவும், இவற்றால் எமது மக்களின் அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்படுவதோடு, வீடுகளும், சொத்துக்களும் சேதமாக்கப் படுவதாகவும் பொதுமக்கள் அதிகாரிகளின் கவனத்திற்குச் சுட்டிக் காட்டினர். 

திங்கட் கிழமையிலிருந்து (05) தொடர்ந்து கிராமங்களுக்குள் வரும் காட்டுயானைகளைக் கட்டுப்டுத்தும் பொறுப்பை இராணுவத்தினரும், வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினரும் ஏற்றிருக்கின்றனர்.

யானைகளைப் பிடிக்கும், அனுராதபுரதிலுள்ள விசேட குழுவினர் புதன் கிழமை (07) இந்த வெல்லாவெளிப் பிரதேசத்திற்கு வருகை தந்து இங்குள் யானைகளைப் பிடித்து ஹபரணையிலுள்ள யானைகள் புணர்வாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் ஆலேசனைகளுக்குமைய இப்பிரதேசத்திலுள்ள கைவிடப்பட்ட காடுகளை ஓரளவிற்கு சுத்தம் செய்து காட்டு யானைகளின் நடமாட்டத்தை நிரந்தரமாகக் குறைப்பதற்கும் அதன் பின்னர் மின்சார வேலி அமைப்பதற்கும். நடவடிக்கை எடுக்கப்படும் ஆகிய மூன்று கோரிக்கைகளையும், அரசாங்க அதிபர் ஆர்;ப்பாட்டத்திலர் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களிடம் தெரிவித்தார்.

இதன் பின்னர் பிற்பகல் 5 மணியளவில் ஆர்ப்பாட்டக் காரர்கள் கலைந்து சென்றதோடு மேற்கூறப்பட்ட கோரிக்கைகள் உடன் அமுல்படுமுத்த வில்லையாயின் எமது போராட்டம் தொடரும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.


இந்நிலைல் ஆர்ப்பாட்டம் முடியும்வரை வீதியில் காத்திருந்த பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பிற்பகல் 4 மணிக்கும் பிரதேச செயலகம் திறக்கப்படாததையடுத்து 4 மணிக்குப் பின்னர் வீதியில் நின்றபடியே வீடுதிரும்பிச் சென்றமையும் குறிப்பிடத் தக்கதாகும்.











SHARE

Author: verified_user

0 Comments: