12 Sept 2015

எதிர்க் கட்சித் தலைவர், குழுக்களின் பிரதித்தலைவர், ஆகியன கிடைத்தமை நாடாளுமன்ற ஜனநாயக மரபுகள்மீது கொண்ட நம்பிக்கையே காரணம் - ஜனா

SHARE
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தமை தொடர்பாகவும், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு குழுக்களின் பிரதித்தலைவர் கிடைத்தமை தொடர்பாகவும் அண்மைய நாட்களில் வருகின்ற செய்திகள், விமர்சனங்கள்,
வலைப்பதிவுகள் யாவற்றையும் நோக்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்ட சதிவலை என்பது போலவும் பேரினவாதக் கட்சிகள் இட்ட பிச்சை என்பது போலவும், ஏதோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து விட்டது போலவும் தனது அடிப்படைக் கொள்கைளில் இருந்து விலகியது போலவும் விமர்சிக்கின்றார்கள், கருத்து தெரிவிக்கின்றார்கள்.
பத்தி எழுத்தாளர்களோ, அரசியல் விமர்சகர்களோ அவரவர் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப இந்த நியமனங்களை நோக்குகின்றனர். இது அவர்களது சுதந்திரம். ஆனால் எமது மாகாணசபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட இதனையொத்த கருத்துக்களை கூறுவதுதான் இன்றைய அரசியல் நகைச்சுவையாக உள்ளது.
என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

இந்த விடையம் தொடர்பில் அவர்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…

இரு பேரினவாதக் கட்சிகளும் எமது தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை உள்ளங்கையில் வைத்திருப்பதாகவும் இதன் ஒருபடியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க் கட்சித்தலைவர் பதவி வழங்கியது என்ற சாரப்பட எம்மவர் ஒருவர் மேடையில் துள்ளிக் குதித்தமையை அண்மையில் கண்ணுற்றேன். இவர்கள் எம்மக்களிடம் என்ன கூறுகின்றார்கள் என்பதை புரிந்துதான் கூறுகின்றார்களா? மாறாக வரவேற்புப்போதை மயக்கத்தில் உளறுகிறார்களோ? என ஐயுறுகிறேன். 

எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது பிரித்தானிய பாராளுமன்ற ஜனநாயக மரபு சார்ந்தது. அரசாங்கக் கட்சிக்கு அடுத்த பெரும்பான்மை உறுப்பினர் கொண்ட கட்சி நாடாளுமன்ற ஜனநாயக மரபின்படி எதிர்க் கட்சியாகும். அதன் தலைவர் எதிர்க் கட்சி தலைவர் ஆவார்.
அந்த வகையில் 2015 பொதுத் தேர்தலில் முதலிரு பெரும்பான்மை பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியும், ( நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னனி ), பொது ஜன ஐக்கிய முன்னணியும் இணைந்து தேசிய அரசு அமைத்துள்ள நிலமையில், மூன்றாவது பெரும்பான்மைக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க் கட்சியாகமையும். அதன் தலைவர் எதிர்க்கட்சி தலைவர் ஆனமையும் ஜனநாயக மரபுகளின் பாற்பட்டதே ஒழிய மைத்திரி – ரணில் மனவிருப்பத்தின் பாற்பட்டதோ அல்லது பேரினவாதிகள் மனமுவந்து இட்ட பிச்சையோ அல்ல என்பதை உரத்து வலியுறுத்திகூற விரும்புகின்றேன். 

இது சதிவலையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தோண்டிய குழியோ அல்ல. இத்தகு பெருமை எம்மவர்பெற முழுக்காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த வடகிழக்கு தமிழ்த் தாயக மக்களேயாகும். 

நியாயமாக எதிர்கட்சிததலைவர் பதவி ஜனவரி 8ம் திகதிக்கு பின்பு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்போது இலங்கையின் ஜனநாயகம் தளம்பல் நிலையில் இருந்தமையும் அப்போதைய சபாநாயகர் உறுதியான முடிவை எடுக்க தவறியமையுமே எதிர்க் கட்சித் தலைவர் பதவி எமக்கு கிடைக்காமைக்கான காரணமாகும்.

இவ்வாறே குழுக்களின் பிரதி தவிசாளர் பதவி செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு கிடைத்தமை மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து விட்டதாக செய்யப்படும் விமர்சனங்களையும் நாம் நோக்க வேண்டும். பிரித்தானிய நாடாளுமன்ற ஜனநாயக சம்பிரதாயங்களின்படி சபாநாயகர் பதவி, பிரதி சபாநாயகர் பதவி, குழுக்களின் பிரதி தவிசாளர் பதவி என்பன அரசாங்க கட்சிக்கே உரித்தான பதவிகள் அல்ல மாறாக பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களது நம்பிக்கையின் அடிப்படையில் தீர்மானம் செய்யப் படுவதாகும். 

சுதந்திர இலங்கையில் சபாநாயகர் பதவி, பிரதி சபாநாயகர் பதவிகளில்கூட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமைக்கு வரலாறு உண்டு. இதற்காக அவர்கள் அரசாங்க கட்சியுடன் இணைந்ததாக கருதுவதில்லை. இலங்கை நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் மரபினை நன்கு அறிந்தவர்களுக்கு இவை புரியும், இதனை ஏற்றுக்கொள்வார்கள.; மற்றவர்கள் இவ்வாறுதான் கோமாளிகளாக குதிப்பார்கள்.

அண்மைக்காலமாக இலங்கை அரசியலில் புத்துயிர் பெறும் ஜனநாயக மரபும் எமது அரசியல் கட்சிகளுக்கிடையேயான பரஸ்பர புரிதலும் நாடாளுமன்ற ஜனநாயக மரபுகள்மீது கொண்ட நம்பிக்கையுமே எதிர்கட்சித் தலைவர் பதவியும் குழுக்களின் பிரதித்தவிசாளர் பதவியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைப்பதற்கு காரணமே ஒழிய தனியொரு கட்சியினதோ, தனியொரு தலைவரினதோ மனவிருப்பமல்ல என்பதை எமது நடுநிலை சாராத விமர்சகர்கள புரிந்துகொள்ள வேண்டு மென்பதே எனது விருப்பமாகும். என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: