22 Sept 2015

நாம் இன்னும் இன்னும் உணர்வு பூர்வமாகச் செயற்பட வேண்டும்... (கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம்)

SHARE
நாம் வெற்றி பெற்றிருந்தாலும் எமது தேர்தல் முடிவுகள் அற்ப சொற்ப வாக்குகளால் வீணடிக்கப்பட்டதில் இருந்து இன்னும் நாங்கள் சரியாகப் பாடம் படிக்கவில்லை இன்னும் நாங்கள் உணர்வுபூர்வமாகச் செயற்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் ஏன் இன்னும் பெரும்பாண்மைக் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றார்கள் என்கின்ற விடயம் தொடர்பில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். 

யாழ்ப்பாணத்தில் வெறுமனே ஆறு வாக்குகளால் ஒரு ஆசனத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதற்குக் காரணம் எமது சகோதரர்கள் தான் எம்மோடு இருந்தவர்கள் தான் அவர்கள் தேர்தலுக்கு வரும் போது பெரும் புயலாக வந்தார்கள் ஆனால் கடைசியில் அந்தப் புயல் புஸ்வானம் ஆகிவிட்டது. அந்த வாக்குகள் அத்தனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருந்தால் இன்னுமொரு வெற்றியையும் அது எமக்கு கிடைத்த தேசியப் பட்டியலில் இன்னுமொரு மாற்றத்தையும் கொண்டு வந்திருக்கும். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயங்கள் இடம்பெறுகின்றன எமது தோளைக் கொடுத்து நாம் தூக்கி விடுகின்றோம் எமது தோலில் ஏறியிருந்து அவர்கள் தலையைக் காட்டுகின்றார்கள். இத்தனையும் செய்வது எமது உடன்பிறப்புகள் தான். 

யார் என்னதான் குறிப்பிட்டாலும் மூன்று பிரதேசங்களுக்கும் மூன்று உறுப்பினர்களைப் பெற்றுக் கொடுத்திருக்கும் கைங்கரியம் எம்மாலேதான் மேற்கொள்ளப்பட்டது. நாம் ஒட்டுமொத்தமாக வேலை செய்ததன் காரணத்தினாலேயே மாவட்டத்தின் தொகுதிகளில் பாரிய வெற்றி பெற்றுள்ளோம்.

நாங்கள் தான் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று யாரும் எண்ணிவிடக் கூடாது கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சிக்கு அபகீர்த்தி ஏற்படுகின்ற விடயங்களைச் செய்பவர்கள் எந்தக்காலத்திலும் கட்சிக்குள் முக்கியமான இடத்தினைப் பெற முடியாது. 

இன்னும் இன்னும் இந்த வெற்றிலைக்கும் யானைக்கும் வாக்கிடுபவர்களை நாம் சிந்திக்க வைக்க வேண்டும். அவர்களது எண்ணங்களை மாற்ற வேண்டும் சொந்தம், சாகியம் என்பதையெல்லாம் விடுத்து நாங்கள் தமிழர் என்ற ஒரே சாகியத்துடன் கொள்கைக்கு வாக்களிக்க வேண்டும். 
நாம் எவ்வளவோ துயரப்பட்டிருக்கின்றோம். எங்களை எவ்வளவோ கண்மூடித் தனமாக அழித்திருக்கின்றது இந்தப் பேரின வாதம் விலங்குகள் என்று கூட கருதாத அளவிற்கு கொத்துக்குண்டுகள் மூலம் எங்களைக் கொன்றழித்தவர்களுக்கு வாக்களித்திருக்கின்றோம், தெற்காசியாவிலே பாரிய நூலகம் என்று போற்றப்பட்ட யாழ் நூலகத்தினை எரியூட்டி எமது உறவுகளை கொன்றவர்களுக்கு நாம் வாக்களித்திருக்கின்றோம். 

இவ்வாறு வாக்களித்த நன்பர்களுக்கு திட்டாது அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். 
நாம் யாரையும் பகைத்துக் கொள்வதில்லை ஆனால் மற்றவர்கள் அவர்களாகவே எங்களைப் பகைத்துக் கொள்வதைப் பற்றி நாம் கண்டுகொள்ளக் கூடாது. அவர்கள் பகைத்தாலும் கூட ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்களான எண்ணி அவர்களை எம்முடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். எமது சகோதரர்களிடம் தான் அதிகமான எதிர்ப்புக்குணங்கள் இருக்கும்.

தற்போது செய்தித்ததாள்களும் அதனை விட இணையத்தளங்களும் அதிகரித்து விட்டன அவரவர் நினைத்தபடி அவரவர் விளங்கிய படி பேசிக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு விடயத்தை விளங்கிக் கொண்டு பேசுவது, நாம் விளங்கிய படி பேசுவது என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் நாம் விடயத்தை விளங்கிக் கொண்டு பேசுபவர்களாக இருக்க வேண்டும். யானை பார்த்த குருடன் போன்று இருக்கக் கூடாது.
இப்போது இருக்கின்ற விசாரணை தொடர்பான விடயம் சாதாரணமாக மக்கள் பேசுகின்ற அரசியல் அல்ல இது சர்வதேச சட்டத்தில் தோய்ந்தவர்கள் அதன் உண்மையான தண்மை பற்றிச் சொல்ல வேண்டும். இதற்கு நாம் கையாளும் விடயம் எமது தலைமை எதனைச் சொல்லுகின்றதோ அதனை விளங்கிக் கொண்டு பேச வேண்டும்.

ஒவ்வொருவரும் விளங்கிய படி கருத்துக்களை கூறுவதை நிறுத்தி மக்களுக்கு ஏற்ற விதத்தில் புரிதலை ஏற்படுத்த வேண்டும் அதுதான் ஒரு சிறந்த தலைமைக்கு அழகு. அதனையே எமது தலைமை மேற்கொள்கின்றது.
எமது மக்கள் எமது தலைமைக்கு அளித்திருக்கும் ஆணை ஒருபோதும் வீணாகாது இருப்பினும் எமது தேர்தல் முடிவுகள் அற்ப சொற்ப வாக்குகளால் வீணடிக்கப்பட்டதில் இருந்து இன்னும் நாங்கள் சரியாகப் பாடம் படிக்கவில்லை இன்னும் நாங்கள் உணர்வுபூர்வமாகச் செயற்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது.

எனவே எம்முடன் தள்ளி நிற்பவர்களை மாற்றுக் கட்சிகளுக்கு இன்னும் வாக்களிப்பவர்களை எம்முடன் அணைத்துக் கொண்டு எதிர்காலத்தில் எமது இனம் தலைநிமிர்ந்து வாழும் அளவிற்கு எமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: