8 Aug 2015

தேர்தல் பிரசாரங்களுக்கு தமது பெயரை பயன்படுத்தவேண்டாமென ஜம் இய்யத்துல் உலமா வேண்டுகோள்

SHARE
தேர்தல் பிரசாரங்களுக்காக காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாவின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாசபை விடுத்துள்ள  இஸ்லாமிய வழிகாட்டல் என்ற தலைப்பிலே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதன் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி) மற்றும் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.ஜீ.எம்.ஜெலீல் (மதனி) ஆகியோரின் கையொப்பத்துடன் நேற்று(07) வெளிடப்பட்ட அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 40 வருடங்களுக்கும் மேலாக காத்தான்குடியில் சமூகப்பணி செய்துவரும் ஜம்இய்யதுல் உலமா எவ்வித அரசியல் சாயமும் சார்பு நிலையுமற்ற மார்க்க நிறுவனமாகையால், அது எந்தக் கட்சிக்கோ வேட்பாளருக்கோ ஆதரவாகவோ எதிராகவோ செயற்படாது. யாரும் ஜம்இய்யாவின் பெயரை தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்த வேண்டாம்.

ஜனநாயக நாடொன்றில் பல கட்சிகள் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடலாம். யாரும் யாரையும் ஆதரிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமும் உரிமையுமாகும். எனினும் வாக்குகளை நன்கு சிந்தித்து மஸூராச் செய்து அளிக்க வேண்டும். முஸ்லிம் உம்மத்திற்கும் தீனுக்கும் யாரால் நிறைய நன்மைகள் கிட்டவுள்ளதோ அவரை தெரிவு செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துவிட்டு வாக்களிக்க வேண்டும்.

 மேலும் வேட்பாளரைத் தெரிவு செய்யும் போது அவரது இறையச்சம், அமானிதம் பேணும் தன்மை, நேர்மை, தூரநோக்கு முஸ்லிம்களின் நலன்களிலான அவரது ஈடுபாடு போன்ற விடயங்களைக் கருத்திற்கொள்வதோடு, தமது அற்ப நலன்களை முன்னுரிமைப்படுத்தி செயற்படாதிருத்தல் வேண்டும்.

 எமது வாக்குச்சீட்டு அமானத் (நம்பிக்கை), ஷஹாதத் (சாட்சி கூறல்) எனும் மிகப் பெரும் இஸ்லாமிய கடமைகளாகும். எனவே, தனிப்பட்ட அற்ப நலன்களுக்கு அப்பால் முஸ்லிம்களுக்கும், நாட்டுக்கும், எமது பிரதேசத்துக்கும் பயன்படும் வகையில் எமது வாக்குகளை அளிப்பதுடன் குடும்பத் தலைவர்கள் தாம் பெற்ற மார்க்க வழிகாட்டல்கள், அறிவுரைகளை தங்கள் குடும்பப் பெண்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களது வாக்குரிமையையும், அரசியல் தொடர்பான தொடர்பாடல்களையும் மிகச்சரிவர அமைத்துக்கொள்வதற்கு உதவிபுரிய வேண்டும்.

இறைநாட்டத்தின் (கழாவின்) படியே அனைத்தும் நடக்குமென்று நாம் நம்பிக்கை கொண்டிருப்பதால் அல்லாஹ்வின் நாட்டம் எப்படியிருக்கின்றதோ அதை நாம் பொருந்திக் கொள்ள வேண்டும். வெற்றி பெற்றவர் யாராயினும் அவருக்காக இறைவனிடம் பிரார்த்தித்து அவருக்கு நஸீஹத் செய்து நல்ல விடயங்களில் அவருக்கு ஒத்துழைப்பும் நல்க வேண்டும். 

தான் ஆதரித்தவர் வெற்றி பெறாததால் அதிகப்படியான முஸ்லிம்களின் தெரிவை ஏற்றுக்கொள்ள மறுப்பது மிகப்பெரும் தவறாகும். அவ்வாறே வெற்றி பெற்ற அணியினர் வெற்றிக் களிப்பால் அல்லாஹ்வை மறந்து அகம்பாவத்துடன் இஸ்லாம் தடுக்கும் வெற்றியூர்வலம், வெடி, பட்டாசு, அனாச்சாரங்கள், அட்டகாசங்கள் எதிலும் ஈடுபடாமல் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமின் சகோதரன் என்ற வகையில் எமது சகோதரத்துவத்தைப் பாதிக்கும் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது.

 குறிப்பாக ஒரு முஸ்லிமின் உயிர், பொருள், மானம், மரியாதை என்பன அடுத்த முஸ்லிமுக்கு ஹராம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். நம் ஒவ்வொருவரினதும் இவ்வுலக மறுவுலக வாழ்வின் வெற்றி நிம்மதி சந்தேசமெல்லாம் நாம் இஸ்லாத்தை எந்தளவு கடைப்பிடிக்கின்றோம் என்பதிலேயே தங்கியுள்ளது. இஸ்லாம் தடுத்த நம் மனச்சாட்சிக்கு விரோதமான நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் அதற்கு நிகரான பின்விளைவுகளையும் சந்தித்தே ஆக வேணடும்.

 அது கப்றுக்குள்ளோ, மறுமையிலோ ஏற்படலாம், அல்லது இவ்வுலகிலேயே நமக்கோ நமக்கு வேண்டப்பட்டவருக்கோ ஓர் ஆபத்து, சோதனை வடிவில் ஏற்படலாம். வினை விதைத்தவன் வினையை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே, ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு சகோதரர் என்ற வகையில் குறிப்பாக தேர்தல் காலங்களில் இஸ்லாம் வலியுறுத்திய சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, நற்பண்புகளைக் கடைபிடித்து உலக விடயத்திற்காக மறுமை வாழ்வைப் பாழ்படுத்தி விடாது அல்லாஹ்வைப் பயந்து நடந்துகொள்வோமாக  என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
SHARE

Author: verified_user

0 Comments: